2026 ஜனவரி 03, சனிக்கிழமை

‘அட்டூழியத்தை நிறுத்தவும்’

Editorial   / 2017 செப்டெம்பர் 27 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

“ஐக்கிய நாடுகளின் மேற்பார்வையில், கொழும்பு, கல்கிஸையில் தங்கவைக்கப்பட்டுள்ள றோகிஞ்சா அகதிகளை, அங்கிருந்து வெளியேற்றச் செய்து அகதிகளையும் முஸ்லிம்களையும், மிகவும் மோசமான முறையில் தூஷித்து அடாவடித்தனம் மேற்கொண்ட இனவாதிகள் மீது, அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று, கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.  

அவர்களுக்குப் பாதுகாப்புக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்கவை சந்தித்தபோதே, அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார். 

அமைச்சரவைக் கூட்டம், நேற்று(26) முடிவடைந்த பின்னர், அமைச்சர் சாகல ரத்நாயக்கவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியபோதே, அமைச்சர் ரிஷாட் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார் என்று, அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கல்கிஸையில் இடம்பெற்ற இந்த மிலேச்சத்தனமான சம்பவங்களை விவரித்ததுடன், அது தொடர்பிலான காணொளியையும் அவரிடம் காட்டினார். 

“கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் பருத்தித்துறை கடல் வழியாக படகுகளில் சென்றுகொண்டிருந்த மியான்மார் அகதிகளை, இலங்கைக் கடற்படை கைதுசெய்து, யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பொலிஸில் ஒப்படைத்தது.  

“பின்னர், அவர்கள் விடுதலைசெய்யப்பட்டு, ஐ.நா அதிகாரிகளின் பராமரிப்பில் கல்கிஸைக்கு கொண்டுவரப்பட்டு, தங்கவைக்கப்பட்டிருந்தமை தெரிந்ததே.  

“இவ்வாறு தஞ்சமடைந்திருந்த அகதிகளையே இன்று (நேற்று) காலை அந்தப் பிரதேசத்துக்கு சென்ற பௌத்த பிக்குகள் அடங்கிய இனவாதிகள் அங்கிருந்து வெளியேற்றினர்.  

“சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டி, அமைதியைப் பேணவேண்டிய பொலிஸாரும் இதற்கு உடந்தையாக இருந்தமை வேதனையானது” என, அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அமைச்சர் சாகலவிடம் சுட்டிக்காட்டினார்.  

இனவாதிகள், ஐ.நா உயர் அதிகாரிகளையும் அச்சுறுத்தியிருக்கின்றனர். ஐ.நாவின் மனித உரிமை சாசனத்தைக்கூட புறக்கணித்து, தான்தோன்றித்தனமாக இனவாதிகள் செயற்பட்டமை, கேவலமானதெனவும் அமைச்சர் ரிஷாட் சுட்டிக்காட்டினார்.  

அமைச்சரின் கருத்துகளைக் கேட்டறிந்த பின்னர், அமைச்சர் சாகல ரத்நாயக்க, பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு மியான்மார் அகதிகளுக்கு எவ்வித இடையூறுகளும் வழங்கவேண்டாம் எனப் பணிப்புரை விடுத்ததுடன், அமைச்சரின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.     


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X