2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

அரசமைப்பு உருவாக்கத்தில் ’ஏகாதிபத்திய நாடுகளின் விருப்பு இல்லை’

Editorial   / 2017 நவம்பர் 22 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 மகேஷ்வரி விஜயனந்தன்

எந்தவோர் ஏகாதிபத்திய நாடுகளின் விருப்பத்துக்கு அமையவும், அரசமைப்பைக் கொண்டுவரத் தீர்மானிக்கவில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் மனோ கணேசன், இது இலங்கைப் பிரச்சினை எனவும் குறிப்பிட்டார்.

சட்டக் கல்விகளுக்கான கல்லூரியின் ஏற்பாட்டில், கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில், "மெய்மையை நோக்கிய தேசிய கலந்துரையாடல்" என்ற தலைப்பில் நேற்று (21) இடம்பெற்ற கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன், "எமது நாட்டுப் பிரச்சினைகளை, ஜெனீவாவிலோ, அமெரிக்காவிலோ கலந்துரையாடுவதற்கு நான் எதிரானவன்" என்றும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர், "புதிய அரசமைப்புத் தொடர்பான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில், இவ்வாறான கருத்தாடல்கள் வரவேற்கத்தக்கன. எனினும், புதிய அரசமைப்புத் தொடர்பில் போலிப் பிரசாரங்களை மேற்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.

"ஏனெனில், இந்த அரசமைப்புக் குழுவில் நானும் ஒரு அங்கத்தவன் என்ற ரீதியில், இதன் உண்மைத் தன்மைகளை வெளிப்படுத்துவது சிறந்தது" என்று குறிப்பிட்டார்.

அரசமைப்புத் தொடர்பான யோசனைகள் மாத்திரமே முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இத தொடர்பில் வெளிப்படையான கருத்தாடல்கள், நாடுபூராகவும் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், "இந்த அரசாங்கம், சொல்வதைச் செய்கின்றது; செய்வதைச் சொல்கின்றது. இதனாலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிணைமுறி ஆணைக்குழுவுக்குச் சென்று வாக்குமூலம் வழங்கினார்" என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை, இங்கு முன்னதாக உரையாற்றியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, "புதிதாகக் கொண்டுவரப்படவுள்ள அரசமைப்பு, ஒற்றையாட்சியை வலியுறுத்தும் என அரசாங்கம் சொல்கிறது. ஆனால், இது சமஷ்டி அரசமைப்பு என்பதாலேயே நாங்கள் எதிர்க்கிறொம்.

"புதிய அரசமைப்புத் தொடர்பில் தீர்மானங்களை எடுக்க வேண்டியவர்கள், எமது நாட்டு மக்களேயன்றி, வெளிநாட்டவர்கள் அல்லர். எனவே, ஒருமித்த (ஏக்கிய) என்ற லேபலை ஒட்டி, சமஷ்டி ஆட்சியைக் கொண்டு வர முயல்கின்றனர்" எனக் குற்றஞ்சாட்டியிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X