2026 ஜனவரி 03, சனிக்கிழமை

‘அரசமைப்பு உருவாக்கம் இப்போது வேண்டாம்’

Editorial   / 2017 ஒக்டோபர் 23 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசமைப்பு உருவாக்கம் தொடர்பாக, வழிகாட்டல் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால வரைவு அறிக்கை, தற்காலிகமாக வாபஸ் பெறப்பட வேண்டும் என, கோட்டே ஸ்ரீ கல்யாணி சமகிரி தர்ம மகா சங்க சபையின் கல்யாணி கரக சபா (நிர்வாகக் குழு), ஏகோபித்தமாக முடிவெடுத்துள்ளது.

புதிய அரசமைப்பை வரைவதற்கான பொருத்தமான நேரம் இதுவன்று என்பதாலேயே இம்முடிவு எடுக்கப்பட்டது என, கோட்டே ஸ்ரீ கல்யாணி சமகிரி தர்ம மகா சங்க சபாவின் அநுநாயக்க (இரண்டாம் நிலைத் தலைவர்) பேராசிரியர் வண. பெலன்வில விமலரத்ன தேரர், நேற்று (22) தெரிவித்தார்.

நாட்டின் ஒற்றையாட்சித் தன்மை, நாட்டின் பாதுகாப்பு, பௌத்தம் ஆகியன தொடர்பில், இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்டால், பாரதூரமான விடயங்கள் ஏற்படும் என, வண. விமலரத்ன தேரர் தெரிவித்தார்.

புதிய அரசமைப்புத் தொடர்பான முன்மொழிவுகள், தற்காலிகமாக வாபஸ் பெறப்பட வேண்டுமெனக் குறிப்பிட்ட தேரர், தற்போதுள்ள அரசமைப்பில் திருத்தங்கள் ஏற்படுத்தப்பட வேண்டுமாயின், அவை பின்னர் செய்துகொள்ளப்படலாம் என்று குறிப்பிட்டார்.

புதிய அரசமைப்புக்கான முன்மொழிவுகள் குறித்து, சுமார் 2 மணித்தியாலங்கள் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த விமலரத்ன தேரர், கோட்டேயின் மகாநாயக்கர், நாட்டைவிட்டு நேற்று இரவு புறப்படவிருந்த காரணத்தால், அவரின்றியே ஸ்ரீ கல்யாணி கரக சபா கூடியது எனத் தெரிவித்தார்.

இது தொடர்பாக இணைந்த அறிக்கையொன்றை, விரைவில் வெளியிடவுள்ளதாகத் தெரிவித்த அவர், கரக சபா, மகாநாயக்கரின் ஆசியுடனேயே ஒன்றுகூடியது எனவும், கரக சபா எடுக்கும் முடிவுகளை, மகாநாயக்கர் அங்கிகரிப்பார் என்றும் தெரிவித்தார்.

தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளவை, வரைவுகளோ அல்லது சட்டமூலமோ இல்லை எனவும், வெறுமனே முன்மொழிவுகளே எனவும், ஜனாதிபதியும் பிரதமரும் கூறியுள்ளனரே எனக் கேட்கப்பட்டபோது, இது வரைவு அல்லவெனத் தாம் அறிவர் எனவும், ஆனாலும், இந்த முன்மொழிவுகளின் அடிப்படையிலேயே புதிய அரசமைப்பு உருவாக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

“அது வரையப்படுவதற்கு முன்பாக, எமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த விரும்புவோம். அதன்மூலமாக, அரசமைப்பை வரைவதில் ஈடுபடுவோருக்கு, அது உதவியாக அமையும்” என்று அவர் தெரிவித்தார்.

ஏற்கெனவே, பல பௌத்த அமைப்புகள், புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கு எதிரான தமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X