2026 மார்ச் 05, வியாழக்கிழமை

இலங்கைக்கு 179ஆவது இடம்

Yuganthini   / 2017 ஜூலை 09 , பி.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியலில், பெண்களின் பங்களிப்பு தொடர்பான சர்வதேசப் பட்டியலில்,  இலங்கை 179ஆவது இடத்தில் உள்ளதாக, பெண்களின் அரசியல் பங்களிப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் மகளிர் ஸ்தாபனத்தின், 2017ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி வரையான தரவுகளை அடிப்படையாக் கொண்டே, இந்தப் பட்டியல் கணக்கிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியில், 190 நாடுகளின் தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை, 179ஆவது இடத்தில் உள்ளது.

இலங்கையில், 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில், 13 பெண் உறுப்பினர்கள் மாத்திரமே அங்கம் வகிக்கின்றனர். இது, மொத்த சதவீதத்தில்,  5.8 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.

இதேவேளை, அமைச்சர்களாகப் பதவி வகிக்கும் பெண்கள் தொடர்பான பட்டியலில், இலங்கை 164ஆவது இடத்தில் உள்ளது. 47 அமைச்சர்களைக் கொண்ட இலங்கையில், 2 பெண் அமைச்சர்கள் மட்டுமே உள்ளதாகவும் இது மொத்த சதவீதத்தில் 4.3 சதவீதம் என்றும், அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் அரசியலில் பெண்களுக்கு 25 சதவீத பிரதிநிதித்துவத்தை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகின்றது. நாடாளுமன்றத்தில்,  பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பான பட்டியலில், ருவண்டா முதலாம் இடத்தில் உள்ளது. அந்த நாட்டின் நாடாளுமன்றத்திலுள்ள 80 பிரதிநிதிகளுள் 49 பிரதிநிதிகள் பெண்களாவர். மொத்த சதவீதத்தில் 61.3 என்ற சதவீதத்தை இது பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .