2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

குடும்பம் தங்குவதில் சிக்கல்; முத்து - எஸ்.பீ வாக்குவாதம்; கூட்டமும் கைவிடப்பட்டது

Editorial   / 2020 பெப்ரவரி 13 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.சந்துரு, நீலமேகம் பிரசாந்த்

நுவரெலியா - அம்பேவல விவசாயப் பண்ணையில், தொடர்ந்து 20 வருடங்களாகத் தங்கிருக்கும் குடும்பமொன்று தொடர்பில், நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில், கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றதுடன், அநாகரிகமான வார்த்தைப் பிரயோகங்களால், கூட்டமும் இடைநடுவிலேயே கைவிடப்பட்டது.

அம்பேவல விவசாயப் பண்ணையில் பணியாற்றியதன் பின்னர் ஓய்வுபெற்ற குடும்பமொன்று, கடந்த 20 வருடங்களாக, அந்தப் பண்ணையில் தங்கி வருகின்றது. ஓய்வுபெற்ற பின்னரும் அப்பண்ணையில் தங்கமுடியாதெனக் கூறியும் அவர்களை வெளியேறுமாறும், பல முறை கடிதங்கள் அனுப்பப்பட்ட போதிலும், அக்குடும்பம் வெளியேறவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

அந்தக் குடும்பத்துக்கு எதிராக, பிரதேச செயலகத்தால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், நுவரெலியா மாவட்டக் கூட்டத்தொடரிலும் இந்த விவகாரம் தொடர்பில் பல முறை விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில், நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம், அதன் தலைவரான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் முத்து சிவலிங்கம் தலைமையில் கூடியது. இதன்போது, குறித்த குடும்பம் தொடர்பிலான பேச்சு அடிபட்ட போது, அக்குடும்பத்துக்கு நிரந்தர வதிவிடத்தை அமைத்துக் கொடுத்துவிட்டு, அங்கிருந்து அவர்களை வெளியேற்றலாமென, முத்து சிவலிங்கம் எம்.பி தெரிவித்தார்.

இதை ஏற்க மறுத்த இராஜாங்க அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க, ஓய்வுபெற்ற பின்னர், அரசாங்க இடத்தில் தொடர்ந்து வசிக்க முடியாது என்றும் அவர்களை எவ்விதமான நிபந்தனையுமின்றி வெளியேற்றுமாறும் கூறினார்.

இராஜாங்க அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்கவின் கூற்றை மறுத்த நுவரெலியா பிரதேச சபையின் தலைவர் தலைவர் வேலு யோகராஜ், திடீரென அக்குடும்பத்தை வெளியேற்றுவதற்கு முன்னர், அவர்களுக்கான நிரந்தர வதிவிடத்தை அமைத்துக் கொடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

இதனையடுத்து, முத்து சிவலிங்கம் எம்.பி உட்பட இ.தொ.காவின் பிரதேச சபைத் தலைவர்களுக்கும் இராஜாங்க அமைச்சர் எஸ்.பீக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

சபைக்கு ஒவ்வாத வார்த்தைப் பிரயோகங்களால், சபை அதிர்ந்தது. சபையைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதால், சபையை ஒத்திவைத்துவிட்டு, முத்துசிவலிங்கம் எம்.பி வெளியேறிவிட்டார்.

சபையிலிருந்து வெளியேறிய எஸ்.பீ.திஸாநாயக்க, அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டாரென அறியமுடிகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X