2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஈரான் நிலநடுக்கம்; பலியானோர் எண்ணிக்கை 450க் கடந்தது

Editorial   / 2017 நவம்பர் 14 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரான் - ஈராக் எல்லைக்கு அண்மையில், இலங்கை நேரப்படி நேற்று முன்தினம் பின்னிரவு 11:48 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, குறைந்தது 450 பேர், ஈரானில் பலியானதோடு, 7,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தால், ஈராக்கில் 6 பேர் உயிரிழந்தனர்.

ஈராக்கின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள குர்திஷ்தான் பிராந்தியத்தில் உள்ள, சுலைமனியா நகரத்தின் ஹலப்ஜா பகுதிக்கு அண்மையாக, இந்த நிலநடுக்கம் தாக்கியது என, ஐக்கிய அமெரிக்க நில அளவாய்த்துறை தெரிவித்தது.

7.3 றிக்டர் அளவில் இது தாக்கியது என, அத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஈராக்கிய அதிகாரிகள் இதை, 6.5 றிக்டர் எனக் குறிப்பிட்டனர். குறைந்தது 14 மாகாணங்கள், ஈரானில் பாதிக்கப்பட்டுள்ளன என அறிவிக்கப்படுகிறது.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகள், மலைப்பாங்கான இடங்களாக இருப்பதால், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளோரை மீட்பதற்கான பணிகள், சிக்கலை எதிர்கொண்டுள்ளன என அறிவிக்கப்படுகிறது. இன்னும் ஏராளமானோர் இவ்வாறு சிக்கிக் கொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் சில, மிகத்தொலைவான கிராமப் பகுதிகளாக இருக்கும் நிலையில், மீட்புப் பணியாளர்கள் தாமதமாகியே அனுப்பப்பட்டனர். எனவே, உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமென, உள்ளூர் அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக, ஈரானின் கேர்மன்ஷோ பகுதியிலுள்ள சர்போல்-ஈ ஸஹாப் பகுதி காணப்படுகிறது. இங்கு, 236க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இப்பகுதி, ஈராக்கிய எல்லைக்கு 15 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, மண்சரிவுகளும் ஏற்பட்ட நிலையில், மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் தாக்கிய அநேகமான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, நிலநடுக்கத்துக்குப் பின்னர் ஏற்படும் அதிர்வுகள் ஏற்படுமென்ற அச்சம் காணப்படுகிறது.

ஈரானிய அதிகாரிகளின் தகவலின்படி, அவ்வாறான குறைந்தது 118 அதிர்வுகள் பதிவாகியுள்ளன எனவும், இன்னும் ஏற்படுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் அறிவிக்கப்படுகிறது.

ஈரானிய செஞ்சிலுவைச் சங்கத்தின் அதிகாரியொருவர் கருத்துத் தெரிவிக்கும் போது, 70,000க்கும் மேற்பட்டோர், தற்காலிகக் கூடாரங்களில் காணப்படுகின்றனர் எனத் தெரிவித்தார்.

ஈராக்கின் குர்திஷ்தான் பிராந்தியத்தில், 6 பேர் கொல்லப்பட்டனர் எனத் தெரிவித்த சுகாதார அதிகாரிகள், குறைந்தது 68 பேர் காயமடைந்தனர் எனத் தெரிவித்தனர்.

அதிகமாகப் பாதிக்கப்பட்ட பகுதியாக, அப்பிராந்தியத்தின் டர்பன்டிகாம் மாவட்டம் அமைந்தது. இது, ஈரானிய எல்லைக்கு அருகில் காணப்படுகிறது. இங்கு, குறைந்தது 10 வீடுகள் இடிந்து வீழ்ந்ததோடு, அங்கு காணப்பட்ட ஒரேயொரு வைத்தியசாலையும், பலத்த சேதமடைந்தது.

ஈரானின் சோக வரலாறு

நிலநடுக்கம் அதிகமாக ஏற்படக்கூடிய எல்லைப் பகுதியில் ஈரான் அமைந்துள்ளதால், நிலநடுக்கங்கள் அதிகமாக ஏற்படக்கூடிய துரதிர்ஷ்டத்தை, அந்நாடு கொண்டுள்ளது.

ஈரானின் தலைநகர் தெஹ்ரானுக்கு 1,000 கிலோமீற்றர் தென்கிழக்காக உள்ள வரலாற்றுப் புகழ்மிக்க பாம் நகரத்தில், 2003ஆம் ஆண்டு டிசெம்பர் 26ஆம் திகதி ஏற்பட்ட 6.6 றிக்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக, 31,000 பேர் உயிரிழந்திருந்தனர். இந்த நிலநடுக்கம், 1900ஆம் ஆண்டுக்குப் பின்னர் பதிவாக, அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய நிலநடுக்கங்களில் 8ஆவது நிலநடுக்கமாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .