2025 டிசெம்பர் 31, புதன்கிழமை

ஈழத்தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்க: ஸ்டாலின்

Editorial   / 2018 நவம்பர் 10 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்களின் பாதுகாப்பை, இந்திய அரசாங்கம் உறுதிப்படுத்தவேண்டும் என, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

மூன்றில் இரண்டு பங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே, தேர்தல் நடைபெற்ற நான்கரை ஆண்டுகளுக்குள் இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும் என்று, இலங்கையின் அரசமைப்பில் உள்ள நிலையில், இந்த அரசமைப்பை போட்டு மிதித்து, அதன் மீறி ஏறி நின்று, நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ள ஜனாதிபதி​ மைத்திரிபால சிறிசேனவின் அராஜகம், பேரதிர்ச்சியைத் தருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மிக மோசமான அரசியல் சட்ட நெருக்கடியை உருவாக்கி, அதன் மூலம் இலங்கையில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் தமிழர்களின் நலனுக்கும் பாதுகாப்புக்கும் மிகப்பெரிய ஏமாற்றத்தையும் அச்சுறுத்தலையும், இலங்கை ஜனாதிபதி ஏற்படுத்தியுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் செயற்பாடு, ஜனநாயகப் படுகொலை என்று குறிப்பிட்டுள்ள அவர், இலங்கை ஜனாதிபதியின் அரசமைப்பு மீறல் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் இந்த அக்கிரமத்தை, ஏதோ அண்டை நாட்டில் நடைபெறும் நிகழ்வுகள் என்று ஒதுக்கி வைத்து விட முடியாது என்றாலும், பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசாங்கம், ஆரம்பத்திலிருந்தே இந்த ஜனநாயக விரோத செயற்பாடுகளை, கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது, கவலையளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முழுக்க முழுக்க ஈழத் தமிழர்களுக்கு எதிராகவும், அவர்களின் உரிமைகளை அடியோடு நசுக்குவதிலும், இனப்படுகொலை, மனித உரிமை மீறல்கள்,  சர்வதேச நெறிகளுக்கு எதிரான போர்க்குற்றங்கள் ஆகியவற்றில் ஈடுபடுவதிலும், தனது ஆட்சிக் காலம் முழுவதும் கங்கணம் கட்டிக் கொண்டு, ஹிட்லர் போல் செயல்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமராக நியமிக்கப்பட்ட போதும், மத்திய அரசாங்கம் அமைதி காத்தது என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஈழத்தமிழர்கள் கண்ணியமாகவும் சுயமரியாதையுடனும், சம உரிமையுடனும் வாழ, இந்திய - இலங்கை ஒப்பந்தப்படி கொண்டுவரப்பட்ட இலங்கை அரசமைப்புச்சட்டத்தின் 13ஆவது திருத்தத்தையும் தாண்டி, அதிக அதிகாரங்களை, ஈழத்தமிழர்களுக்கு அளிக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை, எள்ளி நகையாடிய மஹிந்த ராஜபக்ஷவும் ஜனாதிபதி சிறிசேனவும் கைகோர்த்து கூட்டணி அமைத்து, ஜனநாயகத்தின் குரல்வளை மீது நின்று ஆட்டம் போட்டதை, 14 நாட்களுக்கு மேல், மத்திய பா.ஜ.க வேடிக்கை பார்த்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஈழத் தமிழர்களுக்கு எதிராக பலாத்காரத்தையும் படுகொலையையும் கட்டவிழ்த்து விட்டு, இந்திய அரசாங்கத்தின் எச்சரிக்கையையும் மீறி,  அப்பாவித் தமிழர்களை, இரக்கமின்றி கொன்று குவித்த போர் மோசடிகளுக்காக, சர்வதேச நீதிமன்றத்தில் போர்க்குற்றவாளியாக நிறுத்தப்பட்டு, கடுந்தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய ராஜபக்ஷ, திட்டமிட்டு, இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மையை, செயற்கையாக உருவாக்கியதையும் கண்டு கொள்ளாமல், மத்திய பா.ஜ.க அரசாங்கம் கண் மூடிக் கொண்டிருந்தது என்றும் மத்திய அரசாங்கத்தின் மௌனம், இன்று இலங்கை நாடாளுமன்றக் கலைப்பில் முடிந்து விட்டது என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

எனவே, விபரீதமான அரசியல் சூழலொன்று, இலங்கையில் உருவாகி, அரசியல் நெருக்கடியும் ஸ்திரத்தன்மையும் ஆபத்துக்குள்ளாகி இருக்கும் இந்த நேரத்தில், அங்கு வாழும் ஈழத்தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டிய மிகப்பெரிய பொறுப்பும் கடமையும், இந்திய அரசாங்கத்துக்கு உண்டு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி தாமாகவே உணரவேண்டும் என்றும் நடைபெற்றுள்ள இந்த ஜனநாயகப் படுகொலைக்கு, இந்திய அரசாங்கம் உடனடியாகக் கடும் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X