Editorial / 2017 செப்டெம்பர் 02 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் ஏற்பட்டுள்ள வன்முறைகள் காரணமாக, தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தங்களது உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கூறியுள்ளார்.
இலங்கைக்கு வருகை தந்துள்ள, ஐக்கிய அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் தூதுவர் அலிஸ் வெல்ஸுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைக்கும் இடையில், நேற்று (01) இடம்பெற்ற சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் தூதுவருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பு, ஐக்கிய அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் அதுல் கெசெப்பின் இல்லத்தில் இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பின் போது, நாட்டின் அரசியல் நிலைமைகள், அரசமைப்புச் செயற்பாடுகள் தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் விளக்கமளித்தார். அவர் அங்கு உரையாற்றுகையில்,
“வன்முறைகள் காரணமாக, 1.5 மில்லியன்களுக்கு மேற்பட்ட தமிழ் மக்கள், நாட்டிலிருந்து புலம்பெயர்ந்துள்ளனர். நாட்டில் எஞ்சியுள்ள தமிழ் மக்களாவது, உரிய கௌரவத்துடன் வாழவேண்டும். புலம்பெயர்ந்தவர்கள், நாட்டுக்குத் திரும்பி வர வேண்டும்.
“இலங்கையில் வாழ்கின்ற சகல மக்களது கௌரவத்தைக் காப்பாற்றுவதாகவும் பேணக்கூடியதாகவும், அமையக் கூடிய புதிய அரசமைப்பு ஒன்று உருவாக்கப்படுவது அவசியமாகின்றது. கடந்த காலங்களைப் போலல்லாது, இம்முறை, அரசமைப்பு உருவாக்குவதில், அதிகளவான ஆரம்பக்கட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளத. இச்செயற்பாடுகள் தோல்வியடைய இடமளிக்கப்படக் கூடாது.
“இதயசுத்தியுடனான அதிகாரப் பங்கீடு இன்றியமையாதது. மக்கள் தொடர்ச்சியாக வாழ்ந்துவரும் இடங்களில், தங்களது அன்றாட விடயங்களில், தாமே முடிவுகளை மேற்கொண்டு செயற்படக்கூடியதாக, அவை அமைய வேண்டும்.
“சிறுபான்மையின மக்கள் மோசமானவர்கள் அல்ல. ஆனால், சில அரசியல்வாதிகள், அவர்கள் மத்தியில், புதிய அரசமைப்பு மூலம், நாடு துண்டாடப்படப் போகின்றதென்ற பயத்தைத் தோற்றுவிக்க முயற்சிக்கின்றனர். நாங்கள் நாடு பிரிக்கப்படுவதை விரும்பவில்லை.
“இந்தச் சந்தர்ப்பத்தை நாம் தவறவிடாது. உயர்ந்தளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த நாட்டில் இரண்டு பெரிய கட்சிகளும் இணைந்து செயற்படும் முதலாவது சந்தர்ப்பம் இது. புதிய அரசமைப்புக்குப் பல்வேறு கட்சிகளதும் ஒப்புதலைப் பெறக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. அதனால், நாடாளமன்றத்தில், 2/3 பெரும்பான்மை ஆதரவைப் பெற்று, பின்னர் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றினூடாக, நாட்டு மக்களின் அங்கிகாரத்தைப் பெற முடியும் என்ற நம்பிக்கை உண்டு” என்று அவர் கூறினார்.
கொள்கையில் உறுதிப்பாடுடைய தலைவரைச் சந்திக்கக் கிடைத்தமையையிட்டு தாம் பெருமையடைவதாகவும் கூறியதோடு, கவனம் செலுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பாக ஐக்கிய அமெரிக்க அரசாங்கம், இலங்கை அரசாங்கத்துடனான அதன் தொடர்புகளைத் தொடர்ந்தும் பேணிவரும் என்றும், இதன்போது தூதுவர் அலிஸ் உறுதியளித்தார்.


3 hours ago
7 hours ago
31 Dec 2025
31 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
31 Dec 2025
31 Dec 2025