2026 மார்ச் 03, செவ்வாய்க்கிழமை

கல்முனை விவகாரம்: டிசெ. 10 இல் மீண்டும் சந்திக்க முடிவு

Princiya Dixci   / 2017 நவம்பர் 23 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை மாநகரசபை எல்லை நிர்ணய மீளாய்வு தொடர்பாக, எதிர்வரும் டிசெம்பர் மாதம் 10ஆம் திகதி மீண்டும் கூடி ஆராய்வதற்கு நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பில், கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இரண்டாவது தடவையாக, நேற்று (22) கலந்துரையாடல் இடம்பெற்றது.

எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில், இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில், முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், முஸ்லிம் தமிழ் தேசிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி, முன்னாள் அமைச்சா் ஏ.எல் எம் அதாவுல்லா, இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.துரைராஜசிங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன், சிவில் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

மேற்படிக் கலந்துரையாடல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனிடம் கேட்டபோது,

“கல்முனை மாநகர சபையிலிருந்து சாய்ந்தமருதைப் பிரிக்க வேண்டுமென்ற கோரிக்கை, முஸ்லிம் தலைவர்களிடமிருந்து வந்தது. அதற்கு நாம் இணங்கியிருந்தோம்.

அதற்குப் பின்னர், கல்முனையை நான்காகப் பிரிக்க வேண்டுமென்ற மற்றுமொரு கோரிக்கை அவர்களிடமிருந்து வந்தது. அந்தக் கோரிக்கு, நாங்கள் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. எனினும், நிபந்தனையொன்றை முன்வைத்தோம்.

“கல்முனை மாநகரசபையில் நான்கில் ஒரு பங்கு தமிழ் மக்கள் வாழ்கின்றனர். எனவே, நான்காகப் பிரிக்கும் போது, ஒரு சபை தமிழ் வட்டாரங்களை ஒன்று சேர்க்கும் சபையாக இருக்க வேண்டுமென்று தெரிவித்தோம்.

“அதற்கு அவர்கள், கொள்கையளவில் இணங்கினாலும் கூடியவகையில் தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு சபை இருக்கலாம் என்பதை ஏற்றுக்கொள்கிறோம் என்றனர்.

“பெரும்பான்மையென்பது மட்டுமல்லாமல் எல்லா தமிழ் மக்களும் அடங்கியதான நிலத்தொடர்பு உள்ளதொரு சபையை உருவாக்கலாம் என்ற வரைபடத்தை அவர்களிடம் நாங்கள் வழங்கியிருக்கின்றோம். அவர்களும் தாங்கள் தயாரித்த வரைபடமென்றை, எங்களிடம் வழங்கியிருக்கின்றனர்.  

“இரு பகுதியினரும் அவற்றைப் பார்த்து, அவற்றிலுள்ள வித்தியாசங்கள் என்ன என்பது குறித்து, எதிர்வரும் டிசெம்பர் மாதம் 10ஆம் திகதி கூடிக் க​லந்துரையாடுவதாகத் தீர்மானித்துள்ளோம்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .