2026 மார்ச் 06, வெள்ளிக்கிழமை

ஞானசாரருக்கு பிடியாணை பிறப்பிக்க மறுப்பு

Thipaan   / 2017 ஜூன் 13 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராகப் பிடியாணை பிடிப்பித்து உத்தரவிடுமாறு,  விடுக்கப்பட்ட கோரிக்கையை நீதியரசர்கள் குழாம், நேற்று (12) நிராகரித்தது. தேரருக்கு எதிரான வழக்கு, நீதியரசர்களான எல்.டி.பி.தெஹிதெனிய, தேவிகா தென்னகோன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. 

இதன்போது, தேரர் சார்பில் மன்றில் ஆஜராகியிருந்த, சட்டத்தரணி திரந்த வலலியத்த, தனது சேவை பெறுநருக்கு (ஞானசார தேரருக்கு) உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதால், அவரால் மன்றில் ஆஜராகமுடியாது என, மன்றுக்கு அறிவித்தார்.  

காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை, ஹோமாகம நீதிமன்றத்துக்குள் வைத்து, கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் திகதியன்று, ஞானசார தேரர் திட்டியிருந்தார். 

ஹோமாகம நீதவான் நீதிமன்றத்துக்குள் வைத்து, ஞானசார தேரர் நடந்துகொண்ட முறை, நீதிமன்றத்தை அவமதிப்பதாக அமையுமா என, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் கருத்தை, ஹோமாகம நீதவான் ரங்க திஸாநாயக்க கோரியிருந்தார். 

அத்தோடு, ஞானசார தேரர் மீதான குற்றச்சாட்டு, நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படுமாயின், அவர் மீதான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும், நீதவான் கோரியிருந்தார். 

கடந்த இரு அமர்வுகளுக்கும் ஆஜராகாமையால், ஞானசார தேரருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பித்து உத்தரவிடுமாறு, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரோஹந்த அபேசூரியவால் கோரப்பட்டது. 

அந்தக் கோரிக்கையை நிராகரித்த நீதியரசர்கள் குழாம், மனு மீதான விசாரணைக்கான தினங்களாக, ஜூலை மாதம் 18,19 மற்றும் 20ஆம் திகதிகளை நியமித்து உத்தரவிட்டது. 

கடந்த அமர்வின் போது, ஞானசார தேரர், சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறிய அவரது சட்டத்தரணி மனோகர டி சில்வா, மருத்துவ அறிக்கையையும் மன்றில் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .