Yuganthini / 2017 ஜூன் 19 , மு.ப. 07:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பா.திருஞானம்
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்துமாறு கோரி, சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள, மலையக அரசியல் தலைமைகள் நடவடிக்கை எடுக்கவுள்ளன.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, கண்டி, தும்பற சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் இணைத்தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஷ்ணன், கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார்ஆகியோர் அடங்கிய குழுவினர், சனிக்கிழமை சந்தித்ததுடன், கைதிகளின் விடுதலை தொடர்பிலும் அவர்களின் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடினர்.
இதனையடுத்து, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில், அவர் கூறியதாவது,
“தும்பற சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளைச் சென்று பார்வையிட்டோம். யுத்தம் முடிவடைந்த பின்னர், விடுதலை, புனர்வாழ்வளிப்பு என்ற பெயரில் பல அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ள போதிலும், தாம் இன்னும் சிறைவாசம் அனுபவித்து வருவதாகக் கவலை தெரிவித்தனர்.
“அத்துடன், தம்மீது எட்டுமுதல் 10 வரையிலான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இவ்வழக்குகளின் தீர்ப்புகள் ஒவ்வொருவிதமாக அமைந்துள்ளதால், தாம் இன்னும் எவ்வளவு காலம் சிறை வாழ்க்கையை அனுபவிக்க நேரிடும் என்று தெரியாத நிலையிலேயே உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
“இவர்களது நிலைமை தொடர்பில், நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வளிப்பு அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடி, விடுதலையைப் பெற்றுத்தருவோம் என வாக்குறுதியளித்துவிட்டே நாம் வந்தோம்” என்றார்.
இது தொடர்பில் கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார், “புனர்வாழ்வை அடிப்டையாகக் கொண்டு, வழக்குகளை துரிதப்படுத்தி அல்லது பொதுமன்னிப்பின் கீழ், தம்மை விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறு, அரசியல் கைதிகள் எம்மிடம் கோரிக்கை விடுத்தனர்” என்றார்.
“அத்துடன், சிறைச்சாலையில் இருக்கும்வரை தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் அரசியல் கைதிகள் கோரினர். தும்பற சிறைச்சாலையைப் பொறுத்தவரையில், தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பு மிகவும் பொருத்தப்பாட்டுடனேயே இருக்கிறது. இவர்களது விடுதலை தொடர்பில் கவனம் செலுத்துவோம்” என்றார்.
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago