2026 ஜனவரி 28, புதன்கிழமை

தேசப்பிரியவின் கருத்தோடு முரண்பட்ட ஹூல்

Editorial   / 2020 ஏப்ரல் 20 , மு.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல் ஆணைக்குழுவின் இன்று நடைபெறவுள்ள கூட்டத்துக்குத் தனது பிரசன்னத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, தொலைபேசியில் அழைத்து உறுதிப்படுத்தியதாகவும், மே 28ஆம் திகதிக்குப் பொதுத்தேர்தலை நடாத்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட முன்மொழிந்ததாகவும், கொவிட்-19 வைரஸ் தொற்றல் முடிவடையாவிட்டால் மீண்டும் தேர்தலைப் பிற்போடலாம் எனக் கூறியதாகவும் தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல், தான் இந்த முடிவுக்கு முரண்பட்டதாகக் கூறியுள்ளார். 

இந்நிலையில், பொதுத்தேர்தலுக்கான திகதியொன்றை நிர்ணயிப்பதால் பொதுமக்களின் நலனைப் பாதிக்காமல் விடும் என உறுதியாயிருக்கும் வரையில் தேர்தலுக்கான திகதியொன்றைத் தாங்கள் நிர்ணயிக்கக்கூடாது என குறிப்பொன்றை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எழுதுவதாகத் தெரிவித்து ஏழு பிரதான காரணங்களை ரட்ணஜீவன் ஹூல் குறிப்பிட்டுள்ளார். 

வேட்பாளர்கள் பிரசாரத்தை ஆரம்பித்த பின்னர் தேர்தல் திகதியை மீண்டும் மாற்றினால் தாங்களின் நம்பிக்கையை இழந்துவிடுவோம் எனவும், புதிய நாடாளுமன்றமானது கூடுவதற்கான இறுதித் திகதி இவ்வாண்டு ஜூன் மாதம் இரண்டாம் திகதியென்ற நிலையில், தேர்தல் நடாத்த எதிர்பார்க்கப்பட்டுள்ள அடுத்தமாதம் 28ஆம் திகதிக்கு நெருங்கியதாக அரசமைப்பு நெருக்கடியைத் தவிர்க்கக்கூடிய சாத்தியமில்லையென்றும் ரட்ணஜீவன் ஹூல் கூறியுள்ளார். 

இதுதவிர, பணப் பற்றாகுறையாகவுள்ள தற்போதையை நேரத்தில், புதிய தேர்தல் திகதியில் பில்லியன் கணக்கான ரூபாய்களை அரசாங்கம் செலவளித்த பின்னர் மீண்டும் தேர்தலைப் பிற்போடும்போது மீண்டும் செலவளிக்க நாடு முடியாது எனவும், தேர்தல்கள் நடைபெற்றால் பொதுமக்கள் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகக்கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன எனவும் ரட்ணஜீவன் ஹூல் குறிப்பிட்டுள்ளார். 

இந்நிலையில், வாக்களிப்பது அடிப்படை உரிமை என்ற நிலையில், வாக்காளர்களை அபாயத்துக்குள்ளான நிலையில் தேர்தல்களை நடாத்தும்போது பலர் வாக்களிக்காமல் விடும்போது அது மனித உரிமை மீறலாய் அமைவதோடு, தேர்தல் பணியாளர்களை வலிந்து வேலை செய்யப் பணிப்பதும் மனித உரிமை மீறலாய் அமையும் எனவும் கூறியுள்ள ரட்ணஜீவன் ஹூல், தென்கொரியாவில் கொவிட்-19 தொற்றலுக்கு மத்தியில் நாடாளுமன்றத் தேர்தல் நடாத்தப்பட்டது உதாரணமாகக் காணப்படுகையில், தென்கொரியாவை விட மிகவும் வறிய நாடான நாங்கள் அதை அடியொற்றுவது சாத்தியமில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். 

தென்கொரியாவில் 26.7 சதவீதமானோர் முற்கூட்டிய வாக்களிப்பைப் பயன்படுத்திய நிலையில் அது குறிப்பிடத்தக்களவு வரிசைகளைக் குறைத்திருந்த நிலையில் அதைத் தேர்தல் ஆணைக்குழு செய்ய முடியாது எனவும், தென்கொரியாவில் வாக்களிக்கும் போது வாக்காளர்கள் தொற்று நீக்கியால் தங்களது கைகளைச் சுத்தம் செய்ததுடன், முகக் கவசங்களையும் கையுறைகளையும் அணிந்திருந்ததுடன், ஒரு மீற்றர் இடைவெளியில் நின்றிருந்து, அவர்களின் உடல் வெப்பநிலைகள் பரிசோதிக்கப்பட்டு, 37.5 செல்சியஸுக்கு மேலான உடல் வெப்பநிலையைக் கொண்டிருந்தோர் ஒவ்வொரு பயன்பாட்டுக்குப் பிறகும் தொற்று நீக்கப்படும் தனியான வாக்களிப்பு நிலையங்களில் வாக்களித்திருந்த நிலையில் இங்கு சாத்தியமில்லை எனவும் ரட்ணஜீவன் ஹூல் கூறியுள்ளார். 

இதேவேளை, விஸ்கோசினிலும் தேர்தல்கள் நடைபெற்றபோதும், தேர்தல் பணியாளர்கள் சமுகமளிக்காததால் பல வாக்களிப்பு நிலையங்கள் மூடப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டிய ரட்ணஜீவன் ஹூல், இலங்கையில் தேர்தல் பணியாளர்கள் சமுகமளிப்பார்களா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X