2026 ஜனவரி 09, வெள்ளிக்கிழமை

‘பெரும்பான்மை கட்சிகளுக்கு வாக்குகளை அளிப்பதால் பிரயோசனம் இல்லை’

Editorial   / 2017 ஒக்டோபர் 09 , மு.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன், பேரின்பராஜா சபேஷ்   
“ஐக்கிய தேசியக் கட்சிக்கோ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கோ தமிழ் மக்கள் அளிக்கும் வாக்குகள் வேறு சமூகத்தவர்களுக்குப் போய்ச் சேர்வதால் அவை பிரயோசனமற்றவையாகின்றன” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.   

ஏறாவூர் ஐயன்கேணி தமிழ் வித்தியாலயத்தில், பாடசாலை அதிபர் எம். மனோகரன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற முப்பெரும் விழா நிகழ்வுகளில், பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.   

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,   

“தமிழினம் தான் இழந்தவற்றை மீளப் பெற்றுக் கொள்வதற்கு கல்வி இன்றியமையாததாகும். எல்லாவற்றையும் விட, கல்வி சார்பாக எங்களை வளம்படுத்த வேண்டிய காலத் தேவை நமக்கு இருக்கின்றது” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.   

“ஆனால், போரால் நலிவடைந்த கிழக்கு மாகாணம் கல்வியிலும் ஒன்பதாவது இடத்துக்கு,பின்தள்ளப்பட்டிருப்பது வருத்தமளிக்கின்றது. கிழக்கு மாகாணம், இந்த நிலைக்கு ஏன் வந்தது என்று சீர்தூக்கிப் பார்ப்பது நல்லது. அதிலும் தமிழ்ப் பகுதிப் பாடசாலைகள் மிகக் குறைந்த வளங்களோடும் பின்தள்ளப்பட்ட நிலையிலும் இருக்கின்றன” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   

“கிழக்கு மாகாண சபையிலே, கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஒருவருக்குக் கிடைத்திருந்தும் பதவியிலிருந்த காலத்தில் அவர் தனது பணிகளை சிறந்த முறையில் செய்து முடித்தாரா என்பது என்னைப் பொறுத்த வரையில் கேள்விக் குறியாகத்தான் இருக்கிறது” என்றும் அவர் கூறினார்.   

“நானும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவனாக இருந்தபோதிலும் கூட உண்மையை உரத்துச் சொல்ல நான் தயங்கப் போவதில்லை. தன்னிடம் அதிகாரங்கள் இருக்கும்போது, அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வளப் பங்கீடுகள் தேவையான பிரதேசங்களாக தமிழர் பிரதேசங்கள் இருந்து கொண்டிருக்கின்றன” என்றும் அவர் குறிப்பிட்டார்.   
“மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழர்கள் வாழ்கின்ற 10 பிரதேச செயலாளர் பிரிவுகளும் கூடுதல் வறுமையோடு இருக்கின்றன. தேவைகள் தமிழர் வாழுமிடங்களில் உள்ளன. ஆனாலும் கடந்த காலங்களிலே தமிழ்ப் பிரதேசத்தின் அபிவிருத்தி சார்ந்த நடவடிக்கைகள் கண்துடைப்பாக, நடைபெற்றிருக்கின்றன” என்றும் அவர் எடுத்துரைத்தார்.   

“நாங்கள், எதிர்க்கட்சியில் இருந்தாலும் நீண்ட காலமாகத் தொடர்கின்ற இனப்பிரச்சினையின் தீர்வுக்கு ஏதோவொரு வகையில் நியாயத்துடன் விடயத்தை அணுகித் தீர்வைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற வகையில் அரசாங்கத்துடன் ஆதரவாக உள்ளோம்” என்றார்.   

“ஆனாலும், அரசாங்கம் எங்களது ஆதரவைப் பெற்றிருந்த போதிலும் மத்திய அரசாங்க ஒதுக்கீடாக இருந்த போதிலும் மாகாண அரசாங்க, ஒதுக்கீடாக இருந்த போதிலும், நாம் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றோம். இதற்கான ஆதாரபூர்வமான தரவுகள் என்னிடம் உள்ளன” என்று சுட்டிக்காட்டிய அவர், வைத்தியசாலைகள் புனரமைப்பு, நீர் வழங்கல் திட்டம், நகர அபிவிருத்தி, இப்படிப் புறக்கணிப்புப் பட்டியல் நீண்டு செல்கின்றது” என்றும் கூறினார்.   

“அடுத்த சமூகத்தை நான் குறைகூறவில்லை, அவர்களுக்கும் அபிவிருத்தி நடைபெறத்தான் வேண்டும், ஆனால் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகம் அபிவிருத்தியில் புறக்கணிக்கப்படக் கூடாது என்பதே எமது ஆதங்கமாகும்.   
தமிழ் சமூகத்தின் இழப்புகள் பற்றி அடுத்த சமூகத் தலைவர்கள் சிந்திக்க வேண்டும்” என்றும் கூறினார்.   

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் தமிழ் பேசும் மக்கள் என்ற ரீதியில்தான் சிந்தித்துச் செயற்பட்டு வந்திருக்கின்றது. இந்த நாட்டிலே என்ன தீர்வு வந்தாலும் தமிழ் பேசும் சமூகம் என்ற வகையில்தான் அணுகுமுறைகளைச் செய்து தீர்வைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுத்துவருகின்றது.  

இலங்கையில் மாகாண சபையைக் கோரிய தமிழ் சமூகத்துக்கு அதன் பலாபலன்கள் கிட்டாத போதிலும் ஏனைய சமூகங்கள் அதனை நன்றாக அனுபவிக்கின்றன” என்றார்.   
“இது வேதனைக்குரியது. நாங்கள் என்னத்தை சாதித்திருக்கிறோம் என்று மக்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டாலும் நாங்கள் இயன்றவரை செய்திருக்கின்றோம்.   

அமைச்சுப்பதவிகளை நாங்கள் பெற்றால் அது எங்களுக்காக, இந்த மண்ணிலே எமது உறவுகள் செய்த உயிர்த்தியாகங்களை நாங்கள் கொச்சைப்படுத்தியவர்களாக, எதிர்காலச் சந்ததிக்கு நியாயமான தீர்வைப் பெற்றுக் கொடுக்காத சமூகமாக ஆகி விடுவோம்” என்றார்.   

“அற்ப சலுகைகளுக்காக நாம் ஒருபோதும் சோரம் போகமாட்டோம் என்று எனது அன்பார்ந்த மக்களுக்குச் சொல்லிவைக்க விரும்புகின்றேன்.’ என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .