2020 ஏப்ரல் 04, சனிக்கிழமை

மீன்பிடிக் கைத்தொழிலை பாதுகாக்க ஜனாதிபதி ஆலோசனை

Editorial   / 2020 பெப்ரவரி 27 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீன்பிடிக் கைத்தொழிலைப் பாதுகாத்து நுகர்வோருக்கும் நிவாரணம் வழங்க  நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இழுவைப்படகு உரிமையாளர்கள் முகங்கொடுத்து வருகின்ற பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று நேற்று (26) நடைபெற்றது.

கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர்களான சனத் நிஷாந்த பெரேரா, காஞ்சன விஜேசேகர, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பீ. ஜயசுந்தர உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலர் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

இதன்போது, ஏற்றுமதி சந்தை தொடர்பாக, கொள்கை அடிப்படையில் புதிய திட்டங்களை வகுக்கும்போது ஏற்றுமதியாளர்கள், மீன்பிடிப்படகு உரிமையாளர்கள் உள்ளிட்ட குழுவொன்றின் மூலம் செயற்படுவதன் அவசியத்தை ஜனாதிபதி தெளிவூட்டியுள்ளார்.

இதனை  ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சட்டத்துக்கு புறம்பான முறைகளில் மீன் பிடிப்பதை நிறுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறும் ஜனாதிபதி, இதன்போது ஆலோசனை வழங்கியுள்ளார்.

எவ்வாறாயினும், ஏற்றுமதி நிறுவனங்கள் தமது கப்பல் மூலம் பிடிக்கப்பட்ட மீன்களை மாத்திரமே கொள்வனவு செய்வதாக மீனவ தொழிற்சங்க பிரதிநிதிகள் இதன்போது ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.

தாம் ஏற்றுமதி கைத்தொழிலில் மாத்திரம் தங்கியுள்ளதால், தமது விளைச்சலுக்கு உரிய சந்தை வாய்ப்புக்கள் கிடைக்காமை பாரிய பிரச்சினையாக உள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நிலையில், குறுகியகால மற்றும் நீண்டகால தீர்வுகள் மூலம் இப்பிரச்சினையை தீர்க்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

இழுவைப்படகு உரிமையாளர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைக்கு தற்காலிக தீர்வாக தனியார் துறையினரின் உதவியோடு அவர்களின் விளைச்சலை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .