2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

ரணில், சம்பந்தன் உட்பட 21 பேருக்கு தண்டனை விதிக்க புது ஆணைக்குழு

Editorial   / 2021 ஜனவரி 25 , மு.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியலமைப்பை மீறியுள்ளதாகக் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்ட 21 பேருக்கு எதிராகத் தண்டனை விதிக்கப்படுவதற்கான பரிந்துரையை பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்காக, ஜனாதிபதி விசேட விசாரணை ஆணைக்குழுவை அமைக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் உருவாக்கப்பட்ட அரசியல் பழிவாங்கல் தொடர்பான விசாரணை ஆணைக்குழு, முன்வைத்துள்ள  யோசனையிலேயே, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கும் பிரேரிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மூலமே, ஜே.ஆர். ஜயவர்தனவின் அரசாங்கத்தால், முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் பிரஜாவுரிமை இரத்துச் செய்யப்பட்டது. அவரது குடியுரிமையை இரத்துச் செய்வதற்கு, மக்கள் விடுதலை முன்னணி சாட்சியமளித்தது. 

தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ், விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகளில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவையும் உட்படுத்த வேண்டுமென்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ், ஊழல் ஒழிப்பு விசாரணை குழு, ஊழல் ஒழிப்பு செயலகம் என்பவற்றை அமைக்கும் போது, அவர்களது பணிகள் தொடர்பில் அரசியல்வாதிகள், சிவில் நபர்கள் அரசியலமைப்பை மீறி செயற்பட்டுள்ளதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பை மீறியதால் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஆர். சம்பந்தன், அநுர திஸாநாயக்க, பாட்டலி சம்பிக்க ரணவக்க, ரவூப் ஹக்கீம், சரத் பொன்சேகா, முன்னாள் எம்.பிக்களான மங்கள சமரவீர, ஜயம்பதி விக்கிரமரத்ன, ஜே.சீ. வெலியமுன, சமன் ஏக்கநாயக்க ஆகியோரும் பெயரிடப்பட்டுள்ளனர்.

மேற்குறிப்பிட்டவர்களுக்கு தண்டனை வழங்குவது குறித்து பாராளுமன்றத்துக்குப் பரிந்துரையை முன்வைப்பதற்காக, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. இவ்வாறான குழுவின் பரிந்துரையானது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு வாக்குகளால் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .