Editorial / 2017 ஜூலை 13 , மு.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

விகாரைகளை நிர்வகிப்பதற்கோ அல்லது விகாரைகளின் நடவடிக்கைகளில் தலையிடுவதற்கோ, தனக்கு எவ்விதமான அதிகாரங்களும் இல்லையென, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தெரிவித்தார்.
இளம் பிக்குகள் ஒன்றியத்தின் தேரர்கள் குழுவினருடன், அலரிமாளிகையில் நேற்று (12) இடம்பெற்ற சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், “இந்த விளையாட்டை நிறுத்துங்கள். மதங்களை இழுக்க வேண்டாம். எங்களுக்கும் முடியும் என்று கூறுங்கள். நாங்களும் பௌத்தர்கள். பௌத்தர்களில் பெரும்பான்மையானோர். மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்குவதற்கே வாக்குகளை பயன்படுத்தினர்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
“மதத்துடன் அரசியல் செய்யவேண்டாம். இது, உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்குத் தயாராகி முன்னெடுக்கப்படும் விளையாட்டாகும்” என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன்போது கூறினார்.
“விகாரைகள் தொடர்பான சட்டத்தை மாற்றுவதற்கான தேவை அரசாங்கத்துக்கு இல்லை. அந்தச் சட்டத்தை நாங்கள் மாற்றவும் மாட்டோம். 1931ஆம் ஆண்டு ஹன்சாட்டை எடுத்துப் பாருங்கள். இந்தச் சட்டம் தொடர்பில், அதில் எவ்வளவு நன்றாக போடப்பட்டுள்ளது” என்றும் பிரதமர் தெரிவித்தார்.
“எனினும், ஜே.ஆர்.ஜயவர்தன காலத்தில், அறங்காவலருக்குப் பதிலாக பௌத்த நடவடிக்கைகளுக்கான ஆணையாளர் நியமிக்கப்பட்டார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, பௌத்தர்களின் வாக்குகளில் கூடுதலான வாக்குகள் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதிக்கே கிடைத்தது.
தம்புள்ளை விகாரையை அபிவிருத்தி செய்வதற்காக, மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்கர்களை அறிவுறுத்தியதன் பின்னரே, அங்குள்ள தொல்பொருள் இடங்களைப் பாதுகாப்பதற்கான உரிமை கல்வியமைச்சருக்கு இருக்கிறது.
இந்த முயற்சியைச் சிதறடித்து, மதத்துடன் தொடர்புபடுத்தி எதிராளிகளினால் முன்னெடுக்கப்படும் விளையாட்டு, உடனடியாக நிறுத்தப்படவேண்டும்” என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இதன்போது குறிப்பிட்டார்.
தம்புள்ளை ரஜமகா விகாரையை, உலக மரபுரிமைப் பட்டியலிலிருந்து நீக்கவேண்டுமாயின், அஸ்கிரிய மகாநாயக்கர்களைச் சந்தித்து இவை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தீர்மானமொன்றை எடுக்குமாறு தம்புள்ளை விகாரையின் தேரரர்கள் இதன்போது கேட்டுக்கொண்டனர். அவ்வாறான சந்தர்ப்பமொன்று கிட்டுமாயின், தம்புள்ளை விகாரை தொடர்பில் தற்போது தோற்றியுள்ள பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரமுடியும் என்றும் தேரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .