2026 ஜனவரி 23, வெள்ளிக்கிழமை

’13ஐவிட மேம்பட்டால் வரவேற்போம்’

Editorial   / 2017 செப்டெம்பர் 22 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

"எம்மைப்பொறுத்தவரை, தேசிய இனப்பிரச்சினைக்கான புதிய அரசமைப்பானது, நாம் கடந்த 30 வருடங்களாக கோரிக்கைவிடுத்துவரும் 13ஆவது திருத்தச் சட்டத்தைவிடவும் மேம்பட்டதாக அமையுமாக இருந்தால் அதை வரவேற்போம்" என்று, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இன்று அரசமைப்பு பேரவையில் தெரிவித்தார்.

"தமிழ் மக்கள், தாம் இலங்கையர்களாகவும் தமிழர்களாகவும் இருப்பதற்காக உணர்வுகளுடன் இருந்ததை  முன்னாள் தமிழ்த் தலைவர்களும் சிங்களத் தலைவர்களும் ஆரோக்கியமாக எடுத்துக்கொள்ளாததன் விளைவாகவே, எமது நாடு வெறுக்கத்தக்க வன்முறைகளையும் பிரச்சினைகளையும் சந்திக்கும் நிலைமை ஏற்பட்டது"  என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான வழி நடத்தல் குழுவினால் வரைவு செய்யப்பட்ட புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கையை அரசமைப்புச் சபையில் பிரதமர் சமர்ப்பித்து உரையாற்றியதைத் தொடர்ந்து கட்சித் தலைவர்கள் உரையாற்றினார்கள்.

அரசமைப்பு வரைபு மீதான தமது அபிப்பிராயங்களை முன் வைத்து கருத்துத் தெரிவித்த டக்ளஸ் எம்.பி மேலும் கூறியதாவது,

"இலங்கை இந்திய ஒப்பந்தத்தோடு நாம் தேசிய அரசியல் நீரோட்டத்திற்கு வந்தபோது, 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் ஊடாகவே அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை நோக்கி முன்னேற முடியும் என்று நம்பினோம். அதையே எமது மக்களிடமும் கூறினோம்.

"ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சகவாழ்வு சாத்தியப்பட வேண்டும் என்றும், தமிழ் மக்கள் தாம் இலங்கையராக இருப்பதற்கு தமிழர் என்ற அடையாளத்தை இழக்க வேண்டும் என்றோ, தமிழராக இருப்பதற்கு இலங்கையர் என்பதை விட்டுக்கொடுக்க வேண்டும் என்றோ விரும்பவில்லை.

"இலங்கையராகவும், தமிழராகவும் இந்த நாட்டில் சமத்துவத்துடனும், கௌரவத்துடனும் வாழவே விரும்புகின்றார்கள். எனவே பிரதமர், தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றைக் காணவேண்டும் என்று கடுமையாக முயற்சி செய்வதை நாம் வரவேற்கின்றோம்.

"முக்கியமாக புதிய அரசமைப்பானது, 'மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி' ஏன்ற கோட்பாட்டுக்கு அமைவாக, இலங்கைத் தாய் நாடு மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்றும், குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு சமச்சீரற்ற அதிகாரங்களை வழங்குவதாக அமையவேண்டும்.

"மேல்சபை அமையப்பெற வேண்டும், அதில் சிறுபான்மை இனங்களின் பிரதிநிதிகள் ஐம்பதுக்கு ஐம்பதாக இருக்க வேண்டும் என்றும்,  பொலிஸ் உட்பட முப்படைகளிலும் இனவிகிதாசாரம் பேணப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அரசியலில் பெண்களுக்கு சமபங்கு வழங்கப்பட வேண்டும்" என்று டக்ளஸ் எம்.பி வலியுறுத்தினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X