2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

கிழக்கு மாகாணசபையில் 2017ஆம் ஆண்டுக்கான வரவு –செலவுத்திட்டம் சமர்ப்பிப்பு

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 20 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொன் ஆனந்தம், வடமலை ராஜ்குமார்

2017ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாணசபையின் வரவு –செலவுத்திட்டத்தை மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் இன்று (20) சமர்ப்பித்தார்.

வரவு –செலவுத்திட்டத்தைச் சமர்ப்பிப்பதற்கான  கூட்டத்தொடர், மாகாணசபைத்; தவிசாளர் சந்திரதாச கலப்பதி தலைமையில் கூடியது. இதன்போது, 2016ஆம் ஆண்டுக்கான குறைநிரப்புப் பிரேரணையை முதலமைச்சர் முதலில் சமர்ப்பித்தார். இதனை அடுத்து, 2017ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத்திட்ட உத்தேச அறிக்கையை அவர்  சமர்ப்பித்து உரையாற்றினார்.

இதனை அடுத்து, இந்த வரவு –செலவுத்திட்டம் தொடர்பான கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
அங்கு முதலமைச்சர் உரையாற்றியபோது, '2017ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத்திட்டத்தில் மீண்டெழும் செலவீனத்துக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

2016ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 1,555 மில்லியன் ரூபாயால் இது அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, மூலதனக்கொடை 1,989 மில்லியன் ரூபாயால் குறைந்துள்ளது' என்றார்.

'2017ஆம் ஆண்டுக்காக கிழக்கு மாகாணசபையால் கோரப்பட்ட நிதித் தேவையின் பிரகாரம் மீண்டெழும் செலவீனங்களுக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட நிதித் தேவை 23,582 மில்லியன் ரூபாயாக இருந்தது.
எமது மகாணத்துக்கு நிதி ஆணைக்குழுவால்  அனுமதிக்கப்பட்ட தொகை 20,836 மில்லியன்  ரூபாயாகும். இது கோரப்பட்ட தொகையில் 88 சதவீதமாகும்.

மீண்டெழும் செலவீனங்களில் பிரதானமாக ஆளுக்குரிய வேதனத்துக்காக 16,491 மில்லியன் ரூபாயாகும். ஏனைய செலவீனங்களுக்காக 4,345 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படுகின்றன.

மூலதனச் செலவீனங்களுக்குரிய நிதித் தேவைக்காக மாகாணத்துக்கு குறித்தொகுக்கப்பட்ட அபிவிருத்திக்கொடையின் கீழ் 10,241 மில்லியன் ரூபாய் கோரப்பட்டபோதும், அனுமதிக்கப்பட்ட தொகை 1,544 மில்லியன் ரூபாய் மட்டுமே ஆகும்.

இது கோரப்பட்ட தொகையில் 15 சதவீதமே ஆகும். இதேபோன்று, பிரமாண அடிப்படையிலான கொடையின் கீழ்  1,408 மில்லியன் ரூபாய்; கோரப்பட்டபோதும், எமது மாகாணசபைக்காக  அனுமதிக்கப்பட்ட தொகை 514 மில்லியன் ரூபாயாகும்.
இது கோரப்பட்ட தொகையில் 37 சதவீதமாகும். இவற்றில் துறைசார்ந்த அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 1,807 மில்லியன் ரூபாயும்  மாகாண உட்கட்டமைப்புக்காக 251 மில்லியன் ரூபாயும் வெளிநாட்டு நிதி அளிப்புகளுடனான விசேட கருத்திட்டங்களின் அமுலாக்கத்துக்காக 685 மில்லியன் ரூபாயும் ஒதுக்கப்படுகின்றன' என்றார்.


ஆளுநர் செயலகம், பொதுச்சேவை ஆணைக்குழு, பேரவைச் செயலகத்தின்  
வரவு -செலவுத்திட்டம்; அங்கிகரிப்பு


கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, மாகாண பேரவைச் செயலகம் ஆகியவற்றின் 2017ஆம் ஆண்டுக்கான வரவு –செலவுத்திட்டம்;; மாகாணசபையால் அங்கிகரிக்கப்பட்டது. இவற்றுக்கான வரவு –செலவுத்திட்ட அறிக்கைகளை  மாகாண முதலமைச்சர் சமர்ப்பித்திருந்தார். இவற்றுக்கான  வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை  என்பது குறிப்பிடத்தக்கது.

குறைநிரப்புப் பிரேரணையை
'அங்கிகரிக்கக் கூறுவது சட்டத்துக்கு முரணானது
'

கிழக்கு மாகாணசபையின் குறைநிரப்புப் பிரேரணை தொடர்பாக எவ்வித தகவலும் தெரிவிக்காமல், அதை  அங்கிகரிக்குமாறு கூறுவது சட்டத்துக்கு முரணானது என  மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

மாகாணசபையின் 2017ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத்திட்ட அமர்வின்போது, 2016ஆம் ஆண்டுக்கான குறைநிரப்பு மதிப்பீட்டு அறிக்கை தொடர்பான முதலமைச்சரின் உரை நடைபெற்றது.

இதன்போது, குறுக்கிட்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மாகாணசபையின் முகாமைத்துவ உதவியாளர்களுக்கு  சம்பளத்துடன் கூடிய 10 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில், இவ்வருடத்தில் கடந்த 06 மாதங்களுக்கே 10 ஆயிரம் ரூபாய் இவர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்பட்டது. ஏனைய  06 மாதங்களுக்கு இவர்களுக்கு வழங்கப்படாமலுள்ள கொடுப்பனவு தொடர்பில் குறைநிரப்புப் பிரேரணை அறிக்கையில் காட்ட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

 

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--