2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

மின்சாரத்தை துண்டிப்பதால் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது

Niroshini   / 2016 மார்ச் 30 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.புஹாரி, எப்.முபாரக்,ஏ.எம்.ஏ.பரீத்   

மின்சார கதிரையிலிருந்து காப்பாற்றிய அரசாங்கத்தை மின்சாரத்தை துண்டிப்பதால்  கவிழ்க்க முடியாது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்தார்.  

கிண்ணியாவில்  செவ்வாய்க்கிழமை(29) இடம்பெற்ற கலந்துரையாடலொன்றில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

இன்று சுதந்திர கட்சி உறுப்பினர்கள் சிலர் எமது கட்சியின் மீது பாரதூரமான விமர்சனங்களை முன்வைக்கின்றனர். ஆனால் இவர்களின் விமர்சனங்கள் அனைத்தும் வேடிக்கையானது.

அவர்களின் கட்சி உறுப்பினர்கள் பலர் அமைச்சுப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு சுகபோகங்களை  அனுபவித்துவிட்டு, குற்றசாட்டுகளை மட்டும் ஐக்கியதேசிய கட்சியின் மீது  சுமத்துவதன் பின்னணியில் உள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சியை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அண்மையில் பல பொருட்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டமையால் மக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்கள் பற்றி நாம் அறிவோம். ஆனால், இந்த வரிகளை அதிகரிக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு எமது அரசாங்கம் தள்ளப்பட்டது.

இதற்கு காரணம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரகசியமாக மேற்கொண்ட கொடுக்கல் வாங்கல்களே ஆகும். தற்போது இவை ஒவ்வொன்றாக வெளிவர ஆரம்பித்துள்ளன. கடந்த ஆட்சியாளர்கள் ஒரு வரையறையில்லாமல், கடன் வாங்கி எமது நாட்டின் பொருளாதாரத்தை பாதாளத்துக்குள் தள்ளிவிட்டனர்.

இவர்கள் வாங்கிய கடன் மூலம் வெறும் கண்காட்சி அபிவிருத்தித்திட்டங்களே மேற்கொள்ளப்பட்டன. கட்டம் கட்டமாக தேர்தல் நடத்தி, அப்பகுதிகளில் அபிவிருத்தி என்ற பெயரில் கண்காட்சிகளே காண்பிக்கப்பட்டன. நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றும் அபிவிருத்தித்திட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை.

வேலைவாய்ப்புக்கள் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை. அரச நிறுவனங்களில் உள்ள வெற்றிடங்களுக்கு மேலாக நியமனங்களை வழங்கி அரச நிறுவனங்களை நட்டமடையச் செய்தனர்.

தற்போது நாட்டை என்னிடம் தந்துவிடுங்கள் என கூச்சளிடுகின்றார். இரண்டு முறை மக்கள் வீட்டுக்கு விரட்டியடித்தும் இவருக்கு வெட்கம் வரவில்லை. இந்த நல்லாட்சியை கவிழ்ப்பதற்கு பல சதித்திட்டங்களை தீட்டுகிறார்கள்.

அண்மையில் நாடு முழுவதும் ஏற்பட்ட மின்தடைக்கு பின்னாலும் ஏதோ சதித்திட்டம் இருக்குமோ என சந்தேகம் பலரிடம் எழுந்துள்ளது. உலகில் உள்ள சிறந்த மின்மாற்றிகளே வெடித்துச் சிதறின. உலகில் எங்கும் இதற்கு முன் இவ்வாறு நடைபெறவில்லை.

அத்தோடு நுரைச்சோலை அனல்மின் நிலையம் செயல் இழப்பதற்கும் இவர்களே காரணம். அனல்மின் நிலைய இயந்திரங்களிலும் ஊழல் செய்து தரம் குறைவான இயந்திரங்களை கொள்வனவு செய்துள்ளனர்.

மின்சார கதிரையிலிருந்து காப்பாற்றிய அரசாங்கத்தை மின்சாரத்தை துண்டிப்பதால் கவிழ்க்க முடியாது.
இவர்கள் பாதாளத்துக்குள் தள்ளிய எமது பொருளாதாரத்தை சீர்செய்து நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரபடுத்தவேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்குள்ளது.

இதற்காகவே சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையின் காரணமாக ஏற்பட போகும் பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபடவும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி முக்கியமாகும்.

அத்தோடு நாம் தேர்தல் காலத்தில் பத்து இலட்சம் வேலைவாய்ய்புக்களை உருவாக்குவதாக உங்களுக்கு வாக்குறுதியளித்துளோம். பத்து இலட்சம் வேலைவாய்ய்புக்களையும் இலங்கையில் மாத்திரம் ஏற்படுத்த முடியாது. இதற்காக ஐரோப்ப, அமெரிக்க சந்தைகளையும் தேட வேண்டும்.

ஜனாதிபதி, பிரதமரின் வெளிநாட்டு விஜயங்கள் மூலம் பல வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படவுள்ளது. அத்துடன் எட்கா உடன்படிக்கை மூலமும் பெருமளவிலான வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படும். எட்கா உடன்படிக்கையின் வரைபு இன்னமும் முழுமைபெறவில்லை. ஆகவே பிறக்காத குழந்தைக்கு ஜோதிடம் பார்க்கவேண்டாம் என எதிர்கட்சியினரிடம் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

எட்கா உடன்படிக்கையானது, கடந்த அரசாங்கத்தில் கொண்டுவரப்பட்டது. ஆனால் அதில் நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பல விடயங்கள் காணப்பட்டன. அவை அனைத்தையும் நீக்கி நாட்டுக்கு பயன்தரக்கூடிய  விதத்தில் மாற்றியமைக்கும் முயற்சியிலேயே அரசாங்கம் இறங்கியுள்ளது.

எனவே ஜனாதிபதி பிரதமரின் வழிகாட்டல் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பி நிம்மதியான வாழ்கையொன்றை உருவாக்க உங்கள் ஆதரவு என்றும் தேவை என கூறினார்.

 

    

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X