2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

மூதூர் பிரதேசசபை தவிசாளரின் மறுப்பறிக்கை

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 30 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சி.குருநாதன்)

சம்பூரிலிருந்து இடம்பெயர்ந்து தற்காலிக நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தஅரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரும் பிரேரணை புதன்கிழமை நடைபெற்ற மூதூர் பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்படவில்லை என்று மூதூர்ப் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.ஹரிஸ் விடுத்துள்ள மறுப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'சம்பூரிலிருந்து இடம்பெயர்ந்து தற்காலிக நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரும் பிரேரணையினை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவருமான க.திருச்செல்வம் முன்மொழிந்ததாகவும் மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.ஹரிஸ் வழிமொழிந்ததாகவும் கடந்த 28ஆம் திகதி செய்தியொன்று வெளியாகியுள்ளது.

இந்த செய்தி உண்மைக்கு புறம்பானது. இவ்வாறான ஒரு நிகழ்வு சபைக்கூட்டத்தில் இடம்பெறவில்லை. தவிசாளரின் பெயரை இச்செய்திக்கு வழங்கியமைக்காக மூதூர் பிரதேச சபையின் எதிர்க்கட்சித்தலைவர் திரு.க.திருச்செல்வத்திற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளேன். இந்தச் செய்தியால் எனக்கு  மனவேதனை ஏற்பட்டுள்ளது.

மேற்படி செய்தியானது தனது பெயருக்கும், இச்சபைக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் ஒரு செயலாகும். மூதூர் பிரதேச சபையின் செயற்பாடுகளும் அபிவிருத்திப் பணிகளும், மக்கள் நலனோம்பல் விடயங்களும் மேன்மை தங்கிய ஜனாதிபதியினதும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயர் அதிகாரிகளினதும் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினதும் உதவியுடன் மிகச்சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன், முப்பது வருட காலம் இருளில் மூழ்கிக் கிடந்த எமது பிரதேசம் தற்போதுதான் பாதைகள், பாலங்கள் மற்றும் இன்னோரன்ன அபிவிருத்திகளையும் கண்டு வருகின்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்ற அதேவேளை இந்த அபிவிருத்திப் பணிகளுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினர்களுக்கும் மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் என்ற வகையில் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இதேவேளை, இது விடயமாக எதிர்க்கட்சித் தலைவர் க.திருச்செல்வம் விடுத்த அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'கடந்த 28ஆம் திகதி நடைபெற்ற மூதூர் பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டத்தில் நான் எதிர்க்கட்சித்தலைவர் என்ற வகையில் சம்பூர் மக்கள் மீளக்குடியேற்றப்படல் வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து உரையாற்றினேன்.

இதன்போது தலைவர் ஹரிஸ், அம்மக்கள் முகாம்களில் தங்கியிருப்பது தொடர்பாக ஜனாதிபதியும் எமது அரசாங்கமும் கூடிய கரிசனையுடன் அவர்களுக்கான நலனோம்பல் ஏற்பாடுகளை செய்து வருகின்றது எனவும் இன்று அரசாங்கத்தினாலும் ஏனைய அரசசார்பற்ற நிறுவனங்கிளனாலும் அதிகளவான அபிவிருத்திப் பணிகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வேளையிலே நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கூறினார்.

இதேவேளை, என்னாள் மேற்குறிப்பிட்ட விடயங்கள் 28ஆம் திகதி நடைபெற்ற சபைக்கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்படவில்லை எனவும், தவறான செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளதாகவும் தலைவர் ஹரிஸ் தெரியப்படுத்தியுள்ளார். சம்பவதினம் நடைபெற்ற கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட விடயங்களை நான் தெரிவித்தபோது சபையில் எவரும் எதிர்ப்பு தெரிவிக்காத காரணத்தினால், அவ்விடயம் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது எனக்கருதி பத்திரிகைகளுக்கு அச்செய்தியைக் கொடுத்திருந்தேன்.

எனவே அன்றைய தினம், வெளியான 'சம்பூர் மக்களை மீளக்குடியேற்றுமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள்' என்ற செய்தியில் க.திருச்செல்வம் முன்மொழிந்து தவிசாளர் ஏ.எம்.ஹரிஸ் வழிமொழிந்தார் என்ற செய்தி சபைக்கூட்டத்தில் நடைபெறாத விடயம் என்பதால் இது உண்மைக்கு புறம்பானது என்று மறுப்புத் தெரிவித்து இவ்வறிக்கையினை வெளியிடுகின்றேன்' என்று திருச்செல்வம் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கின்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .