2021 மே 18, செவ்வாய்க்கிழமை

சமுர்த்தி இன்றி மூதூர் மக்கள் 9 வருடங்களாக திண்டாட்டம்

Princiya Dixci   / 2015 ஜனவரி 30 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

திருகோணமலை மாவட்டத்தில் 12 கிராமசேவகர் பிரிவுகளிலுள்ள மக்களுக்கு கடந்த 09 வருடங்களாக சமுர்த்தி நிவாரணமும் சமூக பாதுகாப்பும் கொடுக்காமல் கடந்த அரசாங்கம் வஞ்சித்துள்ளதாக, சமுர்த்தி பெற்ற குடும்பங்களின் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.  

மூதூர் கிழக்கு பிரதேத்தில் 11 கிராம சேவகர் பிரிவு மற்றும் இறால்குழி கிராமம்; உட்பட மொத்தம் 12 கிராமசேவகர் பிரிவுகளிலுள்ள மக்களுக்கு, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சமுர்த்தி நிவாரணமும் சமூக பாதுகாப்பும் கடந்த 2006 மார்ச் மாதம் முதல் கடந்த 09 வருடங்களாக கொடுப்படவில்லை.

தமது இந்தப் பிரச்சிகள் தொடர்பாக இவர்கள் சமுர்த்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

சங்கப் பிரதிநிதிகள், நேற்று வியாழக்கிழமை (29) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது தாம் அனுப்பிய கடிதத்தை ஊடகவியாளர்களுக்கும் கையளித்தனர்.

அக்கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

திருக்கோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் எமது பகுதியானது மூதூர் கிழக்கு என அழைக்கப்படுகின்றது. இப்பிரதேசம் கட்டைப்பறிச்சான் வடக்கு, கட்டைப்பறிச்சான் தெற்கு, சேனையூர், கடற்கரைச்சேனை, சம்பூர் கிழக்கு, சம்பூர் மேற்கு,கூனித்தீவு, நவரெட்ணபுரம், பாட்டாளிபுரம், நல்லூர் மற்றும் பள்ளிக்குடியிருப்பு ஆகிய 11 கிராம உத்தியோகஸ்தர் பிரிவுகளை உள்ளடக்கியதாகும்.

மூதூர் கிழக்குப் பகுதியானது 2006ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்தது. இறுதி யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் மக்கள் அனைவரும் இடம்பெயர்ந்து மட்டக்களப்பில் இயங்கிவந்த நலன்புரி நிலையங்களிலேயே தங்கியிருந்தனர்.

இப்பகுதி இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட பின்னர் சம்பூர் கிழக்கு, சம்பூர் மேற்கு ஆகிய பகுதிகளைத் தவிர ஏனைய பகுதியிலிருந்த மக்கள் அனைவரும் 2008ஆம் ஆண்டு தொடக்கம் பகுதி பகுதியாக மீளக்குடியேற்றப்பட்டனர்.
வறுமைக் கோட்டின் கீழ் வசிக்கும் மக்களுக்கான சமுர்த்தி முத்திரையானது மூதூர் கிழக்கில் வாழும் மக்களுக்கு 2006ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் நிறுத்தப்பட்டுவிட்டது.

எனினும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பணிப்பாளர் நாயகமாக அப்போது கடமையாற்றிய நவநீதன்பிள்ளை, சம்பூர் நலன்புரி முகாம்களை பார்வையிட வந்த போது அவர் வருவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பாக சம்பூர் கிழக்கு, சம்பூர் மேற்கு ஆகிய கிராம உத்தியோகஸ்தர் பிரிவுகளில் உள்ள 547 குடும்பங்களுக்கு மாத்திரம் சமுர்த்தி முத்திரை வழங்கப்பட்டு அது இன்றுவரை தொடர்கின்றது. இப்பிரிவுகளில் கூட முழுமையாக முத்திரைகள் வழங்கப்படவில்லை. இவ்விரு கிராம உத்தியோகஸ்தர் பிரிவுகளிலும் இன்னும் 246 குடும்பங்களுக்கு முத்திரை வழங்கப்பட வேண்டியுள்ளது.

எமது நாட்டிலுள்ள அனைத்துப் பகுதிகளிலும் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களுக்கு சமுர்த்தி முத்திரை வழங்கப்படுகின்றபோது எமது பகுதியில் உள்ள மக்களுக்கு மாத்திரம் வழங்கப்படாமையானது எவ்வகையில் நியாயமானது? இது எமது அடிப்படை மனித உரிமையை மீறுகின்ற செயலாகும். இந்நடவடிக்கை எம்மை மிகவும் சிக்கலுக்குள்ளாக்கியுள்ளதோடு கவலையையும் அளிக்கின்றது.

யுத்த காலத்துக்கு முன்னரும் யுத்த காலத்திலும் நாம் பல துன்பங்களை அனுபவித்தவர்கள். தொடர்ந்தும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். நாம் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வசித்தமை குற்றமா?

கட்டைப்பறிச்சான் வடக்கில் 257 குடும்பங்களுக்கும் கட்டைப்பறிச்சான் தெற்கில் 450 குடும்பங்களுக்கும் சேனையூரில் 486 குடும்பங்களுக்கும் கடற்கரைச்சேனையில் 510 குடும்பங்களுக்கும் சம்பூர் கிழக்கில் 131 குடும்பங்களுக்கும் சம்பூர் மேற்கில் 115 குடும்பங்களுக்கும் கூனித்தீவில் 93 குடும்பங்களுக்கும் நவரெட்ணபுரத்தில் 152 குடும்பங்களுக்கும் பாட்டாளிபுரத்தில் 577 குடும்பங்களுக்கும் நல்லூரில் 447 குடும்பங்களுக்கும் மற்றும் பள்ளிக்குடியிருப்பில் 680 குடும்பங்களுக்கும் சமுர்த்தி முத்திரை வழங்கப்பட வேண்டும். மொத்தமாக 3,898 குடும்பங்கள் சமுர்த்தி முத்திரை பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளன.

மூதூர் கிழக்குப் பிரதேசத்தில் வசிக்கும் எமக்கு எதுவித காலதாமதமுமின்றி உடனடியாக சமுர்த்தி முத்திரைகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

அத்துடன் 2006 ஏப்ரல் தொடக்கம் 2015 ஜனவரி வரையான 106 மாதங்களுக்கும் வழங்கப்பட்டிருக்க வேண்டிய சமுர்த்தி முத்திரைகள் எமக்கு மொத்தமாகவேனும் பகுதிபகுதியாகவேனும் தர வேண்டுமென கோரிநிற்கின்றோம்.

எமது கோரிக்கைகள் நியாயமானதாகும். நீதிக்குப் புறம்பாக நாம் எதனையும் கோரவில்லை. இந்நாட்டின் பிரஜைகள் என்றவகையில் இக்கோரிக்கையினை முன்வைப்பதற்கு நாம் உரித்துடையவர்கள்.

எனவே எமது கோரிக்கைகள் இரண்டினையும் தங்கள் கவனத்திற்கொண்டு, எமது வாழ்க்கையின் ஏழ்மை நிலையினை உணர்ந்து எமக்குச் சார்பான ஒரு தீர்வினைத் தர வேண்டும்.

இந்நாட்டில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் எமக்கும் சமுர்த்தி முத்திரை கிடைப்பதற்கு ஆவனஞ்செய்யுமாறு கோரிக்கைவிடுக்கின்றோம் என இக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்கள்.

இதேவேளை, தமது சமுர்த்தி வங்கிக் கட்டடத்தை காவல்துறையினரிடமிருந்து மீளப்பெறுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கோரி பிறிதொரு கடிதத்தையும் அமைச்சரவைக்கும் அதிகாரிகள் பலருக்கும் அனுப்பிவைத்தள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .