2020 ஜூலை 11, சனிக்கிழமை

‘கன்னியா விநாயகர் ஆலயம் இருந்த இடத்தில் விகாரை கட்டமாட்டோம்’

Editorial   / 2019 ஜூன் 11 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொன்ஆனந்தம்

திருகோணமலை, கன்னியா வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயம் இருந்த இடத்தில் பெளத்த விகாரை கட்ட மாட்டோம் எனவும், தமிழ் பெளத்த வரலாறு இருப்பதையும் ஏற்றுக்கொள்கிறோம் எனவும் கன்னியா விகாரை தேரர்கள் உடன்பட்டுள்ளனர்.

கன்னியாவுக்கு விஜயம் செய்த அமைச்சர் மனோ கணேசன், சிவன்கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்ட பூஜையிலும் கலந்துகொண்டார். பெளத்த விகாரைக்கும் சென்று வழிபாட்டில் ஈடுபட்டார். அத்துடன் கன்னியா நிலைமைகளையும் ஆராய்ந்தார்.

அதுமட்டுமன்றி, அரசாங்க அதிபர் என்.என்.புஸ்பகுமார தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விஷேட கூட்டத்திலும் பங்கேற்றார்.

இதேவேளை, புராதன சிதைவுகளுக்கு சேதம் ஏற்படாத முறையில் கன்னியா வளவுக்குள் வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயத்தை அமைக்கவும், வெந்நீர் ஊற்று சிவன் ஆலயத்தையும் புனரமைக்கவும் உடன்பாடு காணப்பட்டது.

இது தொடர்பான அடுத்த கட்ட கலந்துரையாடலை கொழும்பில் ஜனாதிபதி, பிரதமர், இந்து, பெளத்த விவகார அமைச்சர்கள் கலந்துக்கொள்ளும் மட்டத்தில் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

கன்னியா விநாயகர், சிவன் ஆலய கட்டுமானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய அலுவல்கள் அமைச்சு வழங்கும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

“பூர்விகமான இந்து சமயத்தை அடிப்படையாக கொண்ட இந்துக்களும் பௌத்தர்களும் தங்களுக்குள் முரண்படும் நிலையில் எவ்வாறு இந்த நாட்டின் ஏனைய சமய மக்களை நாம் பாதுகாக்கப்போகின்றோம்” என அமைச்சர் மனோ கணேசன் கேள்வி எழுப்பினார்.

“கன்னியாவை பற்றி எனக்கும் சிறு பராயத்தில் தெரியும் அங்கு எந்தவிதமான பௌத்த சின்னங்களும் இருந்திருக்கவில்லை. நாம் சிறுவயதில் கன்னியாவுக்கு வந்தபோது அங்கு பிள்ளையார் ஆலயம் இருந்ததனை நான் கண்டிருக்கிறேன்” என்றார்.

எது எப்படியிருந்தாலும் இந்த நாட்டில் மதரீதியாகவும், இனரீதியாகவும் தொடர்ந்து நாம் பிளவுகளை ஏற்படுத்தி இந்த நாட்டை சின்னாபின்னமாக்க நாம் அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்த அவர், நாம் ஒரு சிறந்த நாட்டைக்கட்டி எழுப்புவோம். நான் நல்லிணக்க மற்றும் இந்து விவகார அமைச்சர் என்ற வகையில், எதிர்காலத்தில் இவ்வாறான தொரு முரண்பாட்டுச்சூழலை அனுமதிக்க முடியாது. இந்தநாட்டில் பௌத்தர்களாக வெறுமனெ சிங்களவர்கள் மாத்திரமின்றி தமிழர்களும் இருந்துள்ளார்கள் என்றார்.

எனவே, கடந்த காலங்களை கடந்து நாம் ஒரு புதிய நாட்டைக்கட்டி எழுப்பவேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், பூர்வீகமான இந்து சமயத்தை அடிப்படையாக கொண்ட இந்துக்களும் பௌத்தர்களும் தங்களுக்குள் முரண்படும் நிலையில் எவ்வாறு இந்த நாட்டின் ஏனைய சமய மக்களை நாம் பாதுகாக்கப்போகின்றோம் என்றும் வினவினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .