2021 மார்ச் 01, திங்கட்கிழமை

கிண்ணியா நகர் பாடசாலைகள் வெறிச்சோடின

Princiya Dixci   / 2021 ஜனவரி 18 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன்  கியாஸ்

கிண்ணியா நகர் பகுதியில் உள்ள பல பாடசாலைகள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வரவின்றி, இன்றும் (18) வெறிச்சோடிக் காணப்பட்டன.

கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின்  அதிகரிப்பை தொடர்ந்தே இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது.

கடந்த வெள்ளிக்கிழமையும் (15) இந்தப் பாடசாலைகளில் மாணவர்களின் வரவு இன்மையால், கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகள் ஸ்தம்பித நிலை அடைந்திருந்தது. அந்த நிலையே இன்றும் மேற்படி நிலை ஏற்பட்டதாக அதிபர்கள் தெரிவித்தனர். 

கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயம், கிண்ணியா ஆண்கள் பாடசாலை மற்றும் அல் ஹிரா மகளிர் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் மாணவர்கள் எவரும் சமூகம் தரவில்லை என அதிபர்கள் தெரிவித்தனர். 

இதேவேளை, கிண்ணியா அல் அக்ஸா கல்லூரி, கிண்ணியா மத்திய கல்லூரி, ரீ.பி. ஜாயா மகா வித்தியாலயம், குட்டிக்கராச் இஹ்ஸானியா மகளிர் வித்தியாலயம், அப்துல் மஜீத் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் 10 தொடக்கம் 15 சதவீதமான மாணவர்களே நேற்றும் வருகை தந்ததாக, இந்த பாடசாலை அதிபர்கள் தெரிவித்தனர். 

கடந்த வாரம்  கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்தில் பணிபுரியும் ஆசிரியர் மூவர் கொரோனா தொற்றாளராக  இனங்காணப்பட்டதையடுத்தே, மாணவர்களின் வரவில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த நிலையில், இந்தப் பாடசாலைகள் இன்னும் உத்தியோகபூர்வமாக மூடப்படவில்லை. மாணவர்களின் வரவின்மையாலே கல்வி நடவடிக்கைள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஆசிரியர்களின் வரவு வீதம் 60 தொடக்கம் 70 சதவீதமாகக் காணப்படுகிறது.

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கு பெற்றார்களே தயங்குகிறார்கள் என்பது தெளிவாகின்றது. எனவே, பெற்றார்களின் அச்ச நிலையைப் போக்குவதற்கும் மாணவர்களின் மனநிலையில் உறுதிப்பாட்டை ஏற்படுத்துவதற்கும் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

இதேவேளை, கிண்ணியா பகுதியில் முடக்கப்பட்ட பகுதி திறக்கும் வரைக்கும், பாடசாலையை மூடுவதற்கும், பின்னர் பதில் பாடசாலையை நடத்துவதற்கும் அனுமதி கேட்டு, பாடசாலை அபிவிருத்திச் சங்கம், சுகாதார அதிகாரி ஊடாக வலயக் கல்விப் பணிபாளருக்கு கடிதம் அனுப்பி வைத்திருப்பதாக, கிண்ணியா முஸ்லிம் மகளர் மகா வித்தியாலய பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் ஏ.எஸ்.எம்.அனீஸ் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .