2024 மே 04, சனிக்கிழமை

‘ஞானசார தேரரை விடுவிப்பதற்கு ஜனாதிபதி நாடகமாடுகின்றார்’

Editorial   / 2018 நவம்பர் 21 , பி.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்,  எப்.முபாரக், ஒலுமுதீன் கியாஸ், தீஷான் அஹமட், ஏ.எம்.ஏ.பரீத், ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.ஆர்.எம்.றிபாஸ்

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் பௌத்த தேரர்கள் போராட்டம் நடத்திய போது, அத்தேரர்கள் மீது நீர்த்தாரைப் பிரயோகம் நடத்துவது போன்று மக்களுக்குக் காட்டி நாடகமாடிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஞானசார தேரரை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார் என, ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் குற்றஞ்சாட்டினார்.

அலரிமாளிகையில் வைத்து நேற்று (20) மாலை ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே, அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமராகப் பொறுப்பேற்றவுடன் திகண கலவரத்தின் சூத்திரதாரி விடுவிக்கப்பட்டார் என்றும் இன்னும் சில தினங்களில் ஞானசார தேரரையும் விடுவிக்கவே ஜனாதிபதி நாடகமாடுகின்றார் என்றும் தெரிவித்தார்.

ஆகவே, திகண கலவரத்தின் பின்னணியில் யார் இருந்தார்கள், யார் இனவாதிகளைப் பாதுகாத்து, இனவாதத்தைத் தூண்டினார்கள் என இப்போது பொதுமக்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளமுடியுமென்றும் அவர் தெரிவித்தார்.

ஞானசார தேரரை விடுவிக்குமாறு போராட்டம் நடத்திய பிக்குகளை, ஜனாதிபதி செயலகத்துக்குள் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்திய ஜனாதிபதி, ஞானசார தேரரை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், சட்டம் ஒழுங்கு அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு என சகல அதிகாரங்களையும் தன்னிடம் வைத்திருக்கும் ஜனாதிபதி, போராட்டம் நடத்தியவர்கள் மீது  தாக்குதல் நடத்த தான் உத்தரவிடவில்லை எனக் கூறுவது சிறு பிள்ளைத்தனமாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இவ்வாறுதான் நல்லாட்சியிலும் எதிர்மறை விமர்சனங்கள் அனைத்தையும் ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் திருப்பிவிட்டு, நல்லவர் போல் மக்கள் முன் நாடகமாடினார் என்றும் இம்ரான் எம்.பி குற்றஞ்சாட்டினார்.

திருடர்களை பிடிப்பதாகவும் இனவாதிகளை அழிப்பதாகவும் வாக்குறுதியளித்து வெற்றி பெற்ற ஜனாதிபதி, இன்று திருடர்களுக்கும் இனவாதிகளுக்கும் துணையாக நிற்பது கவலையளிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .