2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

'முஸ்லிம்கள் அரசின் பக்கம் இல்லை என்ற செய்தி அரசுக்கு தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது'

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 04 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.அப்துல் பரீத்

முஸ்லிம்கள் அரசாங்கத்தின் பக்கம் இல்லை என்ற தெளிவான செய்தியை முஸ்லிம் வாக்காளர்கள் அரசுக்குச் சொல்லியுள்ளனர் என கிழக்கு மாகாணசபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சிங்கள இனவாதத்திற்கு உரமூட்டி அதன் மூலம் தங்களை நீண்ட காலத்திற்கு நிலை நிறுத்திக் கொள்ள முடியும் என்று அரசு போட்ட கணக்கு தப்புக்கணக்காகி விட்டது. தொடர்ந்தும் இனவாதத்தில் மூழ்கி இந்நாட்டை சின்னாபின்னமாக்க விரும்பவில்லை என்பதை சிங்கள மக்கள் தெளிவாகச் சொல்லியுள்ளனர்.

அதேவேளை சிங்கள மக்களின் வாக்கு மட்டும் போதும் என்ற எண்ணத்தில் சிறுபான்மையினரை புறக்கணித்து வந்த இந்த அரசில் இருந்து நாம் விலகி விட்டோம் என்ற செய்தியையும் தமது வாக்குகள் மூலம் முஸ்லிம் மக்கள் அரசுக்குச் சொல்லியுள்ளனர்.

முஸ்லிம் மதத் தலங்கள் மற்றும் பள்ளிவாயல்களைத் தாக்குவோருக்கெதிராக குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய எந்த ஒரு நடவடிக்கையையும் இந்த அரசு எடுக்கவில்லை. இதனால் நாடு முழுவதும் இருநூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிவாயல்கள் தாக்கப்பட்டன. இந்த விடயம் அரசின் கவனத்திற்கு பலமுறை கொண்டுவரப்பட்ட போதும் அரசு அதனைக் கண்டுகொள்ளவில்லை.

ஜெனீவாவில் இலங்கைக்கு சார்பாக முஸ்லிம் நாடுகள் குரலெழுப்பிய அதேநாள் தம்புள்ள பள்ளிக்கு கைக்குண்டு வீசப்பட்டுள்ளது. எனவே, முஸ்லிம்களின் ஆதரவை தங்களது நலனுக்கு மட்டும் பெற்றுக்கொண்டு முஸ்லிம்களை புறக்கணிக்கும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகின்றன.

நாட்டு மக்களுக்கு மாற்றம் ஒன்றின் அவசியம் ஏற்பட்டுள்ளது. அதனால் தான் அரசு இந்த இரு மாகாணங்களிலும் 17 ஆசனங்களை இழந்துள்ளது. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுமாயின் அரசினால் தாக்குப் பிடிக்க முடியாமல் போகும் சூழ்நிலை உண்டு என்பதை தேர்தல் முடிவு தெளிவுபடுத்தியுள்ளது.

முஸ்லிம் மக்கள் இம்முறை வழமையைவிட அதிகமாக ஐக்கிய தேசியக்கட்சிக்கு வாக்களித்துள்ளனர். மேல், தென்மாகாணங்களில் போட்டியிட்ட முஸ்லிம் வோட்பாளர்கள் பெற்ற விருப்பு வாக்ககள் இதனை புலப்படுத்துகின்றன. மாற்றத்திற்காக வாக்களித்த சகலருக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X