2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

’அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவில்லை'

Editorial   / 2018 செப்டெம்பர் 20 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தை விட தற்போது அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் மனோ கணேசன், பொருட்களின் விலைகளை நல்லாட்சி அரசாங்கம் அதிகரித்து வருதாக எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் போலியான குற்றச்சாட்டுகளுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் வழங்குவதாகவும் தெரிவித்தார்.

தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சினால், கொழும்பு முகத்துவாரத்திலுள்ள, டி லா சால் கல்லூரியில், மாணவர்களுக்கு இலவசமாக பாடசாலை சீருடை மற்றும் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (19) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பின்னர் ஊடகவியலாளர்கள் வினவிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே, தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், நீதித்துறையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையீடுகளை மேற்கொள்வதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை தான் மறுப்பதாகவும், ஜனாதிபதியோ பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவோ நீதித்துறையில் தலையீடுகளை மேற்கொள்ளாது, நீதித்துறை கடந்தகாலங்களைப் போல அல்லாது, சுயாதீனமாக இயங்க வழி செய்துள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

இதேவேளை, யாழ் பல்கலைகழகத்தில் முன்னெடுக்கப்பட்ட “பொங்கு தமிழ் நிகழ்வு” தொடர்பில் வினப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இந்நிகழ்வு தொடர்பில் வீண் குழப்பமடையத் தேவையில்லை எனவும், வடக்கில் உள்ள ஒட்டுமொத்த தமிழ் மக்களும், இந்நிலைப்பாட்டிற்கு ஆதரவு இல்லை எனவும் எடுத்துரைத்தார்.

கிளிநொச்சி மக்கள், கேர்ணல் ரத்னபிரிய பந்துவுக்கு வழங்கிய பிரியாவிடை போன்ற நிகழ்வுகள் வடக்கில் வாழும் தமிழ் மக்களின் மனங்களை பிரதிபளிப்பதாகவும், இதைவிடுத்து, யாரோ  எங்கோ  மாலை அணிவிப்பதையும் மெழுகுதிரி ஏற்றுவதையும் பெரிதுப்படுத்த தேவையில்லை எனவும் சுட்டிகாட்டினார்.

அத்துடன், நாட்டில் சுதந்திரம் இருப்பதால், யார் வேண்டுமானாலும் தங்களது கோரிக்கைகளுக்காக போராட முடியும் என கூறிய அமைச்சர் மனோ, எனினும் பொதுப் போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவையில் உள்ளவர்களின் போராட்டத்தால் நாட்டு மக்களுகே பாதிப்பு எனவும், இதனை தடுத்து நிறுத்துவதற்கான வழிவகைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கூறினார்.

சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க கூறுவாராயின், ஏன் இத்தனை வருடங்கள் இது தொடர்பில் மௌனமாக இருந்தார் என்பதையும், ஒருவேளை அவரும் இந்த கொலைகளுக்கு உடந்தையா? என்பதையும் அவரே தெளிவுப்படுத்த வேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--