2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

பேசாலையில் பதற்றம்

Kogilavani   / 2017 ஜூலை 18 , பி.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

 

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,  கருசல் சந்தியில்,  இன்று மாலை, 10 வயது சிறுமியொருவர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

தலைமன்னாரில் இருந்து கருசல் வீதியூடாக, மன்னார் நோக்கி  சென்ற  கனரக வாகனத்தில் மோதுண்டு, பத்து வயது சிறுமியொருவர் ஸ்தலத்திலேயே பலியானார். பெரிய கருசல் கிராமத்தைச் சேர்ந்த ஜிப்ரி பாத்திமா றிஸ்னா என்பவரே, சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். 

புதுக்குடியிருப்பிலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 5 இல் கல்வி கற்றுவந்த இவர், நேற்றைய தினம், பாடசாலை முடிந்து பெரியகருசல் கிராமத்திலுள்ள தனது உறவினரின் வீட்டுக்கு பஸ்ஸில் சென்றுள்ளார். பஸ் தரிப்பிடத்திலிருந்து இறங்கி, சக மாணவருடன் மேற்படி சிறுமி நடந்துச் சென்றுகொண்டிருந்த போது, அவ்வீதி வழியாக மிக வேகமாக வந்த கன ரக வாகனமொன்று, மாணவி மீது மோதியதில், மாணவி ஸ்தலத்திலேயே பலியானார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து,  சம்பவ இடத்தில் குழுமிய மக்கள், கனரக வாகனத்தின் சாரதியையும் உதவியாளரையும் மடக்கிப்பிடித்து சரமாரியாக தாக்கினர். இதேவேளை, வாகனத்துக்கும் சேதம் விளைவித்துள்ளனர். இதனால், அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. மேலும், மன்னார்-தலைமன்னார் வீதியின் போக்குவரத்தும் சில மணிநேரம் தடைப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்த மன்னார் மற்றும் பேசாலை பொலிஸார்,  நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், சாரதியையும் உதவியாளரையும் மீட்டு, வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

சம்பவ இடத்துக்கு வரழைக்கப்பட்ட மன்னார் நீதவான் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர், சிறுமியின்  சடலத்தை பார்வையிட்டு, மரண விசாரணைகளை மேற்கொண்டதுடன், பிரேத பரிசோதனைக்காக சடலத்தை வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டனர்.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை,  மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .