2025 செப்டெம்பர் 13, சனிக்கிழமை

ஆஷஸ் தொடரிலும் மென்சிவப்புப் புரட்சி

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 13 , பி.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மென்சிவப்புப் பந்துகளைக் கொண்டு விளையாடப்படும் பகல் - இரவு டெஸ்ட் போட்டிகள், ஆஷஸ் தொடரில் முதன்முறையாகச் சேர்க்கப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டிகளில் புரட்சிகரமானதாகக் கருதப்படும் இவ்வகையான போட்டிகள், மிகவும் பழைமைவாய்ந்த ஆஷஸ் தொடரில் சேர்க்கப்பட்டுள்ளமை, இப்போட்டிகளுக்கான ஆதரவை, மேலும் அதிகரிக்க வைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

2017-18 பருவகாலத்துக்கான ஆஷஸ் போட்டி அட்டவணையை, அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. 2017 நவம்பர் 23ஆம் திகதி, பிறிஸ்பேணில் ஆரம்பிக்கவுள்ள போட்டியுடன் ஆரம்பிக்கவுள்ள இந்தத் தொடரின் 2ஆவது போட்டியே, பகல் - இரவு டெஸ்ட் போட்டியாக அமையவுள்ளது. இப்போட்டி, அடிலெய்ட் ஓவல் மைதானத்தில், டிசெம்பர் 2ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

மூன்றாவது போட்டி, பேர்த் மைதானத்தில் இடம்பெறத் திட்டமிடப்படுகின்ற போதிலும், பேர்த்தில் புதிதாக நிர்மாணிக்கப்படும் மைதானத்தில் அப்போட்டியை நடத்துவது குறித்து, மேற்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

டிசெம்பர் 26ஆம் திகதி ஆரம்பிக்கும் பொக்ஸிங் தின டெஸ்ட் போட்டி, வழக்கத்தைப் போன்று மெல்பேண் கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளதோடு, 5ஆவது போட்டி, ஜனவரி 4ஆம் திகதி, வழக்கத்தைப் போன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இதுவரை பகல் - இரவு டெஸ்ட் போட்டிகளாக 3 போட்டிகள் இடம்பெற்றுள்ளதோடு, 4ஆவது போட்டி, நாளை பிறிஸ்பேணில் ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .