Shanmugan Murugavel / 2016 மார்ச் 31 , பி.ப. 01:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தான் அணியின் அண்மைக்காலப் பெறுபேறுகள் தொடர்பாகவும் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பாகவும், அவ்வணியின் பயிற்றுநர் வக்கார் யுனிஸால் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு அனுப்பப்பட்ட இரகசியமானதும் தனிப்பட்டதுமான அறிக்கை, ஊடகங்களுக்கு எவ்வாறு கிடைத்தது என, வக்கார் யுனிஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.
குறித்த அறிக்கை, பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவரிடமும் நேரடியாகச் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அது எவ்வாறு ஊடகங்களுக்குச் சென்றது எனவும் இது குறித்து பாகிஸ்தானின் பிரதமர் நவாஸ் ஷரீப், கவனமெடுக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை விட அதிகமாக அரசியல், பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்குள்ளேயே காணப்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கை, ஊடகங்களிடம் எவ்வாறு கசிந்தது எனக் கேள்வியெழுப்பியபோது, நஜாம் சேதியிடமிருந்தும் ஷஹாரியார் கானிடமிருந்தும், அவமானத்தையே தான் சந்தித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே, 2010-11 காலப்பகுதியில் பயிற்றுநராக இருந்த வக்கார், அதன் பின்னர் மீண்டும் பதவியைப் பெற்று, அவரது பயிற்றுவிப்பின் கீழ், உலக டெஸ்ட் தரப்படுத்தலில் 2ஆவது இடத்துக்கு முன்னேறியிருந்தது. எனினும், ஆசியக் கிண்ணப் போட்டிகளிலும் உலக இருபதுக்கு-20 தொடரிலும் அவ்வணி மோசமான பெறுபேறுகளை வெளிப்படுத்தியது.
இது தொடர்பான அறிக்கையில், இளம் வீரரான உமர் அக்மல், பயிற்சிகளுக்கு ஒழுங்காகச் சமுகமளிப்பதில்லையெனவும் நியூசிலாந்துக்குச் சென்றிருந்த போது, அப்போது முகாமையாளராக இருந்த மொய்ன் கானும், இரவு நேரத்தில் அடிக்கடி வெளியே சென்றதாகவும், வக்கார் யுனிஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தவிர, ஆசியக் கிண்ணப் போட்டிகளுக்காகச் சேர்க்கப்பட்டிருக்காத அஹ்மட் ஷெஷாத், என்ன காரணத்துக்காக உலக இருபதுக்கு-20 தொடரில் சேர்க்கப்பட்டார் எனவும் ஊடகங்களினதும் வெளி அழுத்தத்தினாலுமே அவர் சேர்க்கப்பட்டார் எனவும் வக்கார் குறிப்பிட்டுள்ளார்.
அணித்தலைவரான ஷகிட் அப்ரிடி, துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் அணித்தலைவராகவும் சிறப்பாகச் செயற்படவில்லை என்பதைப் பல தடவைகள் எடுத்துக் கூறியும், தனது கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கவில்லை எனத் தெரிவித்த வக்கார், சரியான அணித்தலைமை இல்லாததன் காரணமாக, அணி வீரர்கள் குழம்பியிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இவற்றுக்கு மேலதிகமாக, பாகிஸ்தான் அணியின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக, 13 பரிந்துரைகளையும் அவர் முன்வைத்துள்ளார். அதில், களத்தடுப்புத் தொடர்பில் அதிக கவனம், உடற்றகுதியில் கவனமெடுப்பது, நவீன காலத்தில் விளையாடிய ஒருவரே பிரதம தேர்வாளராக இருக்க வேண்டும், தேர்வுக் குழுவில் பயிற்றுநருக்கும் இடம், உள்ளூர் கிரிக்கெட் கட்டமைப்பில் முழுமையான மாற்றம் உள்ளிட்ட விடயங்கள் இடம்பெற்றுள்ளன.
10 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
2 hours ago