2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

கெயில் எதிர் கோலி: பேட்ஸ் எதிர் டெய்லர்

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 30 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக இருபதுக்கு-20 தொடரின் அரையிறுதிப் போட்டிகளின் இரண்டாவதும் இறுதியுமான நாள் நாளையாகும். நாளை இடம்பெறவுள்ள போட்டிகளில், ஆண்களுக்கான இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியும் மேற்கித்தியத் தீவுகள் அணியும் மோதவுள்ளதோடு, பெண்களுக்கான இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியும் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் மோதவுள்ளன. இரண்டு போட்டிகளுமே, மும்பை வன்கெடே மைதானத்தில் இடம்பெறவுள்ளன.

பெண்களுக்கான போட்டி, மதியம் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. குழு 'ஏ"இல் விளையாடிய நியூசிலாந்து அணி, 4 போட்டிகளிலும் வெற்றிபெற்றிருந்தது. நியூசிலாந்தின் ஆண்கள் அணியும் 4 போட்டிகளிலும் வெற்றிபெற்றிருந்த நிலையில், ஆண்களைப் போல, ஆதிக்கம் செலுத்திய வெற்றிகளை, பெண்கள் அணி பெற்றிருந்தது. அவ்வணியின் முக்கிய வீராங்கனையாக, அவ்வணியின் தலைவி சுசி பேட்ஸ் காணப்படுகிறார். 4 போட்டிகளில் விளையாடிய அவர், 42.75 என்ற சராசரியில் 116.32 என்ற அடித்தாடும் வீதத்தில், 171 ஓட்டங்களைக் குவித்துள்ளார். தவிர, சோபியா டெவின், றாஷெல் பிறீஸ்ட், சாரா மக்ளாஷன், லெய்க் கஸ்பெரெக், எரின் பேர்மிங்காம் ஆகியோர் முக்கிய வீராங்கனைகளாக உள்ளனர்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி, 4 போட்டிகளில் விளையாடிய அவற்றின் 3 போட்டிகளில் வெற்றிபெற்றதோடு, இங்கிலாந்துக்கெதிராகத் தோல்வியடைந்திருந்தது. அவ்வணியின் முக்கிய வீராங்கனையாக ஸ்ட‡பானி டெய்லர் காணப்படுகிறார். 4 போட்டிகளில் அவர் 40.50 என்ற சராசரியில் 89.50 என்ற அடித்தாடும் வீதத்தில் 162 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். தவிர, ஸ்டெசி-ஆன் கிங், டேன்ட்ரா டொட்டின், அபி பிளெற்சர் ஆகியோர் முக்கிய வீராங்கனைகளாக உள்ளனர்.

ஆண்களுக்கான போட்டி, இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. குழு 1இல் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 4 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றிபெற்றதோடு, ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் தோல்வியடைந்திருந்தது. அவ்வணியின் முக்கிய வீரராக, ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான கிறிஸ் கெயில் காணப்படுகிறார். 2 இனிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடிய அவர், ஆட்டமிழக்காத ஒரு சதம் உட்பட 104 ஓட்டங்களை 208 என்ற அடித்தாடும் வீதத்தில் பெற்றுள்ளார். தவிர, அவ்வணியின் முக்கிய வீரராகக் காணப்பட்ட அன்ட்ரே பிளெற்சர், உபாதை காரணமாக இத்தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளமை, அவ்வணிக்கு பலத்த அடியாகக் காணப்படுகிறது. பந்துவீச்சில் சுலைமான் பென், சாமுவேல் பத்ரி, டுவைன் பிராவோ ஆகியோர் முக்கிய வீரர்களாகக் காணப்படுகின்றனர்.

குழு 2இல் விளையாடிய இந்திய அணி, 4 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றிபெற்றதோடு, நியூசிலாந்து அணிக்கெதிராகன போட்டியில் தோல்வியடைந்திருந்தது. அவ்வணியின் முக்கிய வீரராக, விராத் கோலி காணப்படுகிறார். 4 போட்டிகளில் விளையாடிய அவர், 92 என்ற சராசரியில் 132.37 என்ற அடித்தாடும் வீதத்தில் 184 ஓட்டங்களைக் குவித்துள்ளார். பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜா, ஆஷிஷ் நெஹ்ரா, ஜஸ்பிறிட் பும்ரா ஆகியோர் முக்கிய வீரர்களாகக் காணப்படுகின்றனர்.

எனினும் இந்தியாவின் அனுபவ வீரரான யுவ்ராஜ் சிங், காயமடைந்ததன் காரணமாக இக்குழாமிலிருந்து வெளியேற்றப்பட்டு, மனிஷ் பாண்டே சேர்க்கப்பட்டுள்ள போதிலும், இப்போட்டியில் அவர் விளையாடுவாரா என்று தெரியவில்லை.

கடந்த முறை இடம்பெற்ற உலக இருபதுக்கு-20 தொடரில் இறுதிப் போட்டிவரை சென்று, இலங்கை அணியிடம் தோல்வியடைந்திருந்த நிலையில், அன்ட்ரே பிளெற்சரின் இழப்பால் சிறிதளவு பலமற்றிருக்கும் மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு, மற்றோர் இறுதிப் போட்டிக்குச் செல்வதற்கு, இந்திய அணி எதிர்பார்த்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X