2021 மே 18, செவ்வாய்க்கிழமை

கிரிக்கெட்டைப் பின்தள்ளிய மைதான வன்முறை

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 05 , பி.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் கட்டாக்கில் இடம்பெற்ற இருபதுக்கு-20 போட்டியில், கிரிக்கெட் சார்ந்த விடயங்களைப் பின்தள்ளி, மைதானத்தில் காணப்பட்ட ஒரு தொகுதிப் பார்வையாளர்களின் நடவடிக்கைகள் அமைந்துகொண்டன.

இன்று இடம்பெற்ற இப்போட்டியில், இந்திய அணியின் மோசமான பெறுபேறுகள் காரணமாக, இரசிகர்கள் குழப்பத்தை ஏற்படுத்தினர்.

இந்திய அணி 92 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த பின்னர், இனிங்ஸ் இடைவேளையின் போது மைதானத்தை நோக்கி வெற்றுப் போத்தல்கள் வீசப்பட்ட போதிலும், போட்டியில் பாதிப்பெதனையும் அடது ஏற்படுத்தியிருக்கவில்லை.
ஆனால், தென்னாபிரிக்க அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது 11 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 64 ஓட்டங்களுடன் அவ்வணி காணப்பட்ட போது, இடையூறு ஏற்படுத்தப்பட்டது.

பெருமளவிலான போத்தல்கள் வீசப்பட்டதைத் தொடர்ந்தே இந்த இடையூறு ஏற்பட்டதோடு, 27 நிமிடங்களுக்குப் போட்டி இடம்பெற்றிருக்கவில்லை. மீண்டும் போட்டி ஆரம்பித்து, இரண்டு ஓவர்கள் சென்ற பின்னர், மீண்டுமொருமுறை இடையூறு ஏற்படுத்தப்பட்டு, 24 நிமிடங்கள் இடைநிறுத்தப்பட்டது. அதன் பின்னர் போட்டி மீள இடம்பெற்ற போதிலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாகக் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.

குறிப்பாக, முதற்தடவை போத்தல்கள் வீசப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கெதிராக நடவடிக்கை எடுப்பதற்குப் பதில், பாதுகாப்புக் கடமைக்காக அனுப்பப்பட்டிருந்த பொலிஸார், போட்டியைப் பார்வையிடுவதிலேயே கவனம் செலுத்தியதாக, முன்னாள் தலைவர் சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட ஏராளமானோர் விமர்சனங்களை விடுத்தனர். அத்தோடு, மூன்று முறை ஒரே மாதிரியான சம்பவம் இடம்பெற்றமை, பாதுகாப்பு ஏற்பாடுகளில் காணப்பட்ட பலவீனமே எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வழக்கமாக, மைதானத்துக்குள் போத்தல்கள் கொண்டு செல்லப்பட அனுமதிக்கப்படுவதில்லை என்பதோடு, பிளாஸ்டிக் கோப்பைகளிலேயே வழங்கப்படும் என்ற போதிலும், ஒடிஸாவில் காணப்பட்ட கடுமையான வெப்பத்தின் காரணமாகவே போத்தல்களை அனுமதித்ததாக, ஒடிஸா கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இவ்விடயத்தைப் பெரிதுபடுத்தாத இந்திய அணித்தலைவர், முதலாவது போத்தல் எறியப்படுவதைத் தொடர்ந்து எறியப்படும் ஏனைய போத்தல்கள், வெறுமனே களிப்புக்காகவே எறியப்படுவதாகவும், பாதுகாப்புத் தொடர்பில் ஆபத்தொன்று காணப்பட்டதாக நினைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

எனினும், தென்னாபிரிக்க அணித்தலைவர் பப் டு பிளெஸிஸ், இவ்வாறான விடயங்கள் இடம்பெறுகின்றமை குறித்துத் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியதோடு, இவ்வாறான விடயங்கள் மீள இடம்பெறாமலிருக்க வேண்டுமென்ற தனது விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .