2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

சம்பியன்ஷிப் முன்னிலையை அதிகரித்தார் ஹமில்டன்

Editorial   / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிங்கப்பூர் கிரான்ட் பிறிக்ஸை வென்ற மெர்சிடீஸ் அணியின் ஐக்கிய இராச்சிய ஓட்டுநரான லூயிஸ் ஹமில்டன், இவ்வாண்டுக்கான போர்மியுலா வண் சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் தனது முன்னிலையை அதிகரித்துக் கொண்டார்.

நேற்று  இடம்பெற்ற பந்தயத்தை முதல் நிலையிலிருந்து ஆரம்பித்த ஹமில்டன், பந்தயத்தைக் கட்டுப்படுத்தி முதலாமிடத்தைப் பெற்றுக் கொண்டார்.

இந்நிலையில், இவ்வாண்டுக்கான போர்மியுலா வண் சம்பியன்ஷிப்பில் ஹமில்டனின் போட்டியாளரான பெராரி அணியின் ஜேர்மனிய ஓட்டுநரான செபஸ்டியன் வெட்டல் பந்தயத்தை மூன்றாமிடத்தில் ஆரம்பித்து, முதலாவது சுற்றின் ஏழாவது வளைவிலேயே பந்தயத்தை இரண்டாவதாக ஆரம்பித்த றெட் புல் அணியின் நெதர்லாந்து ஓட்டுநரான மக்ஸ் வெர்ஸ்டப்பனை முந்தியபோதும் பெராரி அணியின் தவறொன்றால் இறுதியில் மூன்றாமிடத்தையே பெற முடிந்தது.

வெட்டல் இரண்டாமிடத்துக்கு வந்தவுடன் 14ஆவது சுற்றில் அவருக்கு மேலதிக வேகத்தை வழங்கும் பொருட்டு மிகவும் மெதுவான டயர்களை மாற்றுவதற்காக பெராரி அணியால் அழைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் மீண்டும் பந்தயத்துக்குள் நுழைந்தபோது போர்ஸ் இந்தியா அணியின் மெக்ஸிக்க ஓட்டுநரான சேர்ஜியோ பெரேஸுக்கு பின்னால் ஒரு சுற்று முழுவதும் இருக்க வேண்டியிருந்தது. எனினும், வெட்டலுக்கு அடுத்ததாக 15ஆவது சுற்றிலேயே அதிகம் நீடிக்கக்கூடிய மெதுவான டயர்களுக்கு மாறிய ஹமில்டன், வெட்டலுக்கு முன்பாகவே பந்தயத்தில் இணைந்திருந்ததுடன், வெர்ஸ்டப்பனும் தனது டயர்களை மாற்றி வெட்டலுக்கு முன்பாக பந்தயத்தில் இணைந்திருந்தார். அந்தவகையில், வெர்ஸ்டப்பன் இரண்டாமிடத்தைப் பெற்றிருந்தார்.

இந்நிலையில், குறித்த பந்தயத்தில் ஹமில்டனின் சக மெர்சிடீஸ் அணியின் பின்லாந்து ஓட்டுநரான வல்ட்டேரி போத்தாஸ் நான்காமிடத்தைப் பெற்றதுடன், வெட்டலின் சக பெராரி அணியின் பின்லாந்து ஓட்டுநரான கிமி றைக்கோனன் ஐந்தாமிடத்தைப் பெற்றார்.

அந்தவகையில், இன்னும் ஆறு பந்தயங்களும் அதிகபட்சமாக 150 புள்ளிகளுமே மீதமாகவுள்ள நிலையில், இவ்வாண்டுக்கான போர்மியுலா வண் சம்பியன்ஷிப்புக்கான புள்ளிகள் பட்டியலில் இரண்டாமிடத்தில் 241 புள்ளிகளுடன் காணப்படும் வெட்டலை விட 40 புள்ளிகள் அதிகமாகப் பெற்று 281 புள்ளிகளுடன் முதலிடத்தில் ஹமில்டன் காணப்படுகின்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X