2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

சோதனைக்கு மத்தியில் சாதனைப் பட்டியலில் ரங்கன ஹேரத்

Shanmugan Murugavel   / 2016 மே 29 , மு.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டியில், மோசமான திறமை வெளிப்பாடுகளைக் காண்பித்த இலங்கை அணி, மிக மோசமான நிலைமையில் காணப்படுகிறது. இவ்வாறான சோதனையான நிலைமைகளுக்கு மத்தியிலும், இலங்கை அணி மகிழ்ச்சியடைவதற்குக் காரணமொன்று காணப்பட்டது. டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை, இலங்கையின் ரங்கன ஹேரத் கடந்தமையே, அதற்கான காரணமாகும்.

தனது 69ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிவரும் ரங்கன ஹேரத், முதலாவது இனிங்ஸ் முடிவடைந்ததுடன், 124 இனிங்ஸ்களில் பந்துவீசி, 30.04 என்ற சராசரியில் 64.5 என்ற விக்கெட் கைப்பற்றும் வீதத்தில் ஓவரொன்றுக்கு 2.79 ஓட்டங்கள் என்ற சராசரியில், 300 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அவரது 300ஆவது விக்கெட்டாக, இங்கிலாந்தின் ஸ்டீவன் பின் அமைந்தார்.

தனது 21ஆவது வயதில், அவுஸ்திரேலிய அணிக்கெதிராக டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்ட ரங்கன ஹேரத், முதல் இனிங்ஸிலேயே 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். அவரது முதல் விக்கெட், றிக்கி பொன்டிங் ஆவார். இவ்வாறு திறமையை வெளிப்படுத்திய போதிலும், இலங்கை அணியில் முத்தையா முரளிதரன் காணப்பட்டமையால், ஹேரத்துக்கான வாய்ப்புகள், அவ்வப்போது மாத்திரமே கிடைத்து வந்தன.

அவருக்கான மாற்றத்தை வழங்கிய வாய்ப்பு, 2009ஆம் ஆண்டு கிடைத்தது. முத்தையா முரளிதரன் காயமடைய, காலியில் பாகிஸ்தானுக்கெதிராக இடம்பெற்ற போட்டிக்காக, இங்கிலாந்தின் கழகப் போட்டிகளில் பங்குபற்றிவந்த ஹேரத்துக்கு, அவசர அழைப்புக் கிடைத்தது. இலங்கை அணி தோல்வியடையுமென எதிர்பார்க்கப்பட்ட போட்டியில், இரண்டாவது இனிங்ஸில் 11.3 ஓவர்களில் 15 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக் கொடுத்து, 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஹேரத், அப்போட்டியின் நாயகனாகவும் தெரிவானார்.

அந்தப் போட்டிக்கு முன்னர், 14 போட்டிகளில் விளையாடிய 39.39 என்ற சராசரியில் 80.6 என்ற விக்கெட் கைப்பற்றும் வீதத்தில் 36 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்த ஹேரத், அந்தப் போட்டியிலிருந்து இதுவரை, 55 போட்டிகளில் 28.77 என்ற சராசரியில் 62.3 என்ற விக்கெட் கைப்பற்றும் வீதத்தில் 264 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

மொத்தமாக அவர் கைப்பற்றிய 300 விக்கெட்டுகள், இலங்கை சார்பாகக் கைப்பற்றப்பட்ட 3ஆவது அதிகூடிய விக்கெட்டுகளாகும். 800 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முரளிதரன் முதலிடத்திலும் 355 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய சமிந்த வாஸ் இரண்டாவது இடத்திலும் காணப்படுகின்றனர். அத்தோடு, 300 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இரண்டாவது இடதுகைச் சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையும், ரங்கன ஹேரத்துக்கு உண்டு. முதலாமவராக, நியூசிலாந்தின் டானியல் விற்றோரி காணப்படுகிறார்.

தனது 69ஆவது போட்டியில் 300ஆவது விக்கெட்டைக் கைப்பற்றிய ஹேரத், வேகமாக அந்த மைல்கல்லை அடைந்த 9ஆவது பந்துவீச்சாளர் என்ற பெருமையை, மிற்சல் ஜோன்சனுடன் பகிர்ந்துகொள்கிறார். வசீம் அக்ரம், கேர்ட்லி அம்ப்ரோஸ், இயன் பொத்தம், ஹர்பஜன் சிங், பிரட் லீ, ஷோன் பொலக், மக்காயா இன்டினி, கொர்ட்னி வோல்ஷ், ஜேம்ஸ் அன்டர்சன், கபில் தேவ், ஸ்டுவேர்ட் ப்ரோட், ஸகீர் கான், சமிந்த வாஸ் உள்ளிட்ட பலர், ரங்கன ஹேரத்தை விட அதிகமான போட்டிகளை எடுத்துக் கொண்டார்கள் என்பது, ஹேரத்தின் திறமையை வெளிக்காட்டுகிறது.

முரளியின் ஓய்வின் பின்னர் இலங்கை என்ன செய்யும் என்ற கேள்வி எழுந்திருந்த நேரத்தில், அவரது இடத்தை ஓரளவுக்கு முழுமையாகவே நிரப்பினார் என்ற பெருமை, ஹேரத்துக்கு உண்டு. இன்னும் நிறையக் காலத்துக்கு அவரால் போட்டிகளால் பங்குபற்ற முடியாது என்ற நிலையில், அவருக்கு அடுத்தது யார் என்பதே, தற்போதுள்ள கேள்வியாக இருக்கிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .