2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

டெல் போட்ரோவை வென்று சம்பியனானார் ஜோக்கோவிச்

Editorial   / 2018 செப்டெம்பர் 10 , பி.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில், உலகின் தற்போதைய மூன்றாம் நிலை வீரரான சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச் சம்பியனானார்.

இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற இறுதிப் போட்டியில், தற்போதைய உலகின் நான்காம் நிலை வீரரான ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்ட்டின் டெல் போத்ரோவை வென்றே ஜோக்கோவிச் சம்பியனானார்.

நேற்று முன்தினம் இடம்பெற்ற அரையிறுதிப் போட்டிகளில், ஜப்பானின் கீ நிஷிகோரியை 3-6, 4-6, 2-6 என்ற நேர் செட்களில் ஜோக்கோவிச் வென்றும் உலகின் முதல்நிலை வீரரும் 17 தடவைகள் கிரான்ட் ஸ்லாம் சம்பியனும் நடப்புச் சம்பியனுமான ஸ்பெய்னின் ரபேல் நடாலுடனான போட்டியில் 7-6 (7-3), 6-2 என முன்னிலையில் டெல் போத்ரோ இருக்கும்போது உபாதை காரணமாக நடால் விலகிய நிலையிலும் இறுதிப் போட்டிக்கு இருவரும் தகுதிபெற்றிருந்தனர்.

இறுதிப் போட்டிக்கு வரும் வரைக்கும் டெல் போத்ரோ போன்று வேகமாக சேவ் செய்யக்கூடியவர்களை ஜோக்கோவிச் சந்திருக்காதபோதும் தனது பலமான வேகமானதும் நீண்ட தூரத்துக்கு போட்டியைக் கொண்டு செல்லக் கூடியதுமான ஆட்டத்தால், 6-3 என்ற செட் கணக்கில் முதலாவது செட்டை ஜோக்கோவிச் வென்றார்.

தொடர்ந்த இரண்டாவது செட்டில் ஒரு கட்டத்தில் 3-3 எனவும் அதனைத் தொடர்ந்து 20 நிமிடங்கள் இடம்பெற்ற ஆட்டத்தின் பின்னர் 4-4 எனக் காணப்பட்டபோதும் டைபிரேக்கர் வரை சென்ற இந்த செட்டை 7-6 (7-4) என்ற ரீதியில் ஜோக்கோவிச் கைப்பற்றினார்.

மூன்றாவது செட்டில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்ற ஜோக்கோவிச், டெல் போத்ரோ விட்ட தவறுகளால் 6-3 என வென்று சம்பியனாகி தனது 14ஆவது கிரான்ட் ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றினார்.

அந்தவகையில், அதிக கிரான்ட் ஸ்லாம் பட்டங்களைக் கைப்பற்றியவர்கள் பட்டியலில் தற்போது தனது ஆதர்ஷ நாயகனான ஐக்கிய அமெரிக்காவின் பீற்றர் சாம்ப்ராஸுடன் மூன்றாமிடத்தை ஜோக்கோவிச் பகர்ந்து கொண்டுள்ளார். 20 கிரான்ட் ஸ்லாம் பட்டங்களுடன் முதலிடத்தில் உலகின் இரண்டாம் நிலை வீரரான சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரரும் இரண்டாமிடத்தில் 17 கிரான்ட் ஸ்லாம் பட்டங்களுடன் ரபேல் நடாலும் காணப்படுகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--