2021 மே 10, திங்கட்கிழமை

தொடரை வென்றது இங்கிலாந்து

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 20 , பி.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

நான்காவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் 84 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இங்கிலாந்து அணி, நான்கு போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.  

இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணித்தலைவர் ஒயின் மோர்கன், தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என தெரிவித்தார். இங்கிலாந்து அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படதா போதும், பாகிஸ்தான் அணியில், காயத்திலிருந்து மீண்ட யசீர் ஷா, ஸபார் கோகருக்கு பதிலாகவும், அஹமட் ஷஷாத், இஃப்திகார் அகமட்டுக்கு  பதிலாகவும் இடம்பெற்றனர்.

முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 355 ஓட்டங்களைக் குவித்தது. முதல் நாற்பது ஓவர்களில் மூன்று விக்கெட்களை இழந்து 226 ஓட்டங்களை பெற்றிருந்த அவ்வணி, இறுதிப் பத்து ஓவர்களில் இரண்டு விக்கெட்களை இழந்து 129 ஓட்டங்களைக் குவித்திருந்தது.

துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பாக, ஜொஸ் பட்லர் 52 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 8, ஆறு ஓட்டங்கள், 10 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 116 ஓட்டங்களையும், சர்வதேசப் போட்டிகளில் தனது கன்னிச் சதத்தை பூர்த்தி செய்த ஜேசன் ரோய் 102 ஓட்டங்களையும், ஜோ ரூட் 71 ஓட்டங்களையும் பெற்றனர்.

இதில், தனது 50 ஓட்டங்களை 30 பந்துகளில் பூர்த்தி செய்த பட்லர், அடுத்த 22 பந்துகளில் 66 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். 46 பந்துகளில் சதத்தை பூர்த்து செய்த பட்லர், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பெறப்பட்ட ஏழாவது வேகமான சதம் என்ற சாதனையை சமப்படுத்தினார். இந்தச் சதம், இங்கிலாந்து சார்பாக பெறப்பட்ட வேகமான சதம் என்பதோடு, இங்கிலாந்து சார்பாக பெறப்பட்ட இரண்டாவது, மூன்றாவது வேகமான சதங்களையும் பட்லரே கொண்டிருக்கின்றார்.

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக அணித்தலைவர் அஸார் அலி, மொஹமட் இர்பான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்ததோடு, யசீர் ஷா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி துடிப்போடு வெற்றி பெறும் நோக்கில், அதிரடியாக வெற்றியிலக்கை விரட்டிய போதும், தொடர்ச்சியான இடைவேளைகளில் வீழ்த்தப்பட்ட விக்க்கெட்டுகள் காரணமாக 40.4 ஓவர்களில் 271 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து தோல்வியடைந்தது.

துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பாக ஷோய்ப் மலிக் 52 ஓட்டங்களையும், பாபர் அஸாம் 51 ஓட்டங்களையும் அஸார் அலி 44 ஓட்டங்களையும் மொஹமட் ஹபீஸ் 37 ஓட்டங்களையும் சஃப்ராஸ் அகமட், அன்வர் அலி தலா 24 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக அதில் ரஷீத், மொயின் அலி தலா மூன்று விக்கெட்டுக்களையும் டேவிட் வில்லி 2 விக்கெட்டுக்களையும் ரீஸ் டொப்லி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

போட்டியின் நாயகனாகவும், தொடரின் நாயகனாகவும் இங்கிலாந்து அணியின் ஜொஸ் பட்லர் தெரிவானார்.

இரு அணிகளுக்கிடையிலான மூன்று இருபது-20 சர்வதேச போட்டித் தொடர் எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X