2021 மே 06, வியாழக்கிழமை

‘துரோகி'யானார் முரளி

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 25 , பி.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

முரளிதரன், இடம்பெறவுள்ள இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான தொடருக்காக, அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு ஆலோசகராகச் செயற்படுகின்ற நிலையில், அது தொடர்பான சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது.

இது தொடர்பாக இலங்கையின் எதிர்ப்பு ஏற்கெனவே வெளிப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பாகவும், அது தொடர்பான சர்ச்சையை, இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால எழுப்பியுள்ளார்.

"அவுஸ்திரேலியாவுக்குப் பயிற்றுவிக்கும் முடிவு, நீண்டகாலத்தில் முரளிக்கே பாதமாக அமையும், இலங்கை கிரிக்கெட்டுக்கல்ல" என்று அவர் தெரிவித்தார்.  இதற்கு முன்னர், பல்வேறு கடினமான சந்தர்ப்பங்களில் முரளியைப் பாதுகாத்ததாகத் தெரிவித்த அவர், அவுஸ்திரேலியாவோடு இணையும் அவரது முடிவு, தன்னைக் காயப்படுத்தியதாகத் தெரிவித்தார்.

இவ்வாறான முடிவால், தனது தொழில் வாழ்க்கையை முன்னேற்றுவதற்கு எந்தத் தடையும் கிடையாது எனத் தெரிவித்த சுமதிபால, ஆனால் நன்னெறியின் அடிப்படையில் இது இடம்பெறுவதாக நினைக்கவில்லை எனவும், இந்தத் தொடர், வோண் - முரளிதரன் கிண்ணம் எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்தோடு, உள்ளூர் விளையாட்டரங்கொன்றை, உரிய அனுமதியின்றி அவுஸ்திரேலிய வீரர்களைப் பயிற்றுவிக்க முரளி பயன்படுத்தியமை குறித்து, அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையிடம் முறையிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, முரளி விவகாரத்தை, இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், பெரிய விடயமன்று என ஆரம்பம் முதலே தெரிவித்து வருவதோடு, நேற்றைய தினமும் அதை உறுதிப்படுத்தினார். "அதுவொரு விடயமன்று. எவருக்கும் தொழிலொன்றைச் செய்வதற்கு அனுமதியுள்ளது" என அவர் நேற்றுத் தெரிவித்தார்.
ஆனால், இலங்கையின் சில ஊடகங்களும் சமூக ஊடக இணையத்தளங்களும், முரளியைத் துரோகி என அழைக்க ஆரம்பித்துள்ளன.

இது தொடர்பாகக் கருத்துத் தெரவித்த முரளிதரன், 10 நாட்களுக்குள் தான் துரோகி ஆகியுள்ளதாகத் தெரிவித்தார். அத்தோடு, முரளிதரனைத் துரோகி என பல்வேறு தரப்பினரும் அழைக்க, இலங்கையின் பிரதான சுழற்பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத்துடன், இலங்கை அணி தங்கியிருக்கும் அணி ஹொட்டலில் வைத்து, நேற்றுத் திங்கட்கிழமை நீண்ட நேரமாகச் சந்தித்துக் கலந்துரையாடிக் கொண்டிருந்தார் முரளி.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .