2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

போட்டியை ஆரம்பத்திலேயே எதிர்வுகூறிய அசேல

Editorial   / 2017 ஜூலை 20 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வே அணிக்கெதிரான போட்டியில், தன்னால் சதம் பெற முடியாது எனவும், தான் வெற்றியைப் பெற்றுக் கொடுப்பார் எனவும், அசேல குணரட்ன, போட்டியின் 5ஆவது நாளிலேயே கூறினார் என, இலங்கை அணியின் தலைவர் டினேஷ் சந்திமால் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தப் போட்டியில், ஆட்டமிழக்காமல் 80 ஓட்டங்களைப் பெற்ற அசேல, போட்டியின் நாயகனாகவும் தெரிவானார்.

இந்நிலையில், 5ஆவது நாள் காலையில் நடந்த உரையாடலை, அணித்தலைவர் சந்திமால் வெளிப்படுத்தினார். “காலையில் வைத்து, அசேலவிடம் நான், ‘இன்று நீங்கள் சதம் பெறப் போகிறீர்கள்’ என்று கூறினேன். அதற்கு அவர், தன்னம்பிக்கையுடன் என்னிடம், ‘இல்லை, சந்திமால். சதம் பெறுவதற்கு எனக்குத் தேவையிருக்காது. 70 ஓட்டங்களைப் பெற்று, போட்டியை நான் வெல்வேன்’ என்று தெரிவித்தார்” என்று, சந்திமால் குறிப்பிட்டார்.

அசேலவின் அந்தப் பண்பைப் பாராட்டிய சந்திமால், “இவ்வாறான நம்பிக்கையைத் தான், என்னுடைய வீரர்களிடமிருந்து நான் எதிர்பார்க்கிறேன். அவர் சொன்னதைச் செய்ய முடியாமல் போவதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனால் அவர் பேசிய விதம், அணித்தலைவராக நானே, இந்தப் போட்டியை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை வழங்கியது. இவ்வாறான வீரர்களைக் கொண்டிருப்பது குறித்து, நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்று தெரிவித்தார்.

இதேவேளை, இந்தப் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெறுவதற்கு, அசேல குணரட்னவும் நிரோஷன் டிக்வெல்லவும் இணைந்து பகிர்ந்துகொண்ட இணைப்பாட்டம் முக்கியமானதாக அமைந்தது. அந்த இணைப்பாட்டத்தின் போது, நிரோஷன் டிக்வெல்ல, தன்னை எப்போதும் கதைத்துக் கொண்டிருக்குமாறு கோரினார் என, அசேல வெளிப்படுத்தினார்.

“மைதானத்துக்கு அவர் வந்த பின்னர், டிக்வெல்ல என்னிடம், ‘என்னோடு எந்த நேரமும் கதைத்துத் கொண்டிருந்து, என்னை ஓட்டங்களைப் பெற வையுங்கள்’ என்று கூறிக் கொண்டிருந்தார்” என்று அசேல குறிப்பிட்டார்.

டெஸ்ட் போட்டிகளில், நிரோஷன் டிக்வெல்ல, இதற்கு முன்னர் பெரிய இனிங்ஸொன்றைப் பெற்றுக் கொள்ளாத நிலையில், தனக்கு அந்த அனுபவமிருப்பதன் காரணமாக, இவ்வாறான நிலைமைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாக ஆலோசனை வழங்குமாறு கோரவே, டிக்வெல்ல அப்படிக் கேட்டார் என, அசேல மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .