2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

போட்டியின் நடுவில் விலகினார் நடால்

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 27 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் முன்னணி வீரர்களில் ஒருவரான ரபேல் நடால், கடந்த ஆறு ஆண்டுகளில் முதன்முறையாக, போட்டியொன்றின் நடுவிலிருந்து விலகியுள்ளார். மியாமி பகிரங்க டென்னிஸ் தொடரின் போட்டியிலேயே அவர் இவ்வாறு விலகியுள்ளார்.

இத்தொடருக்காக 5ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ள ரபேல் நடால், உலகின் 94ஆம் நிலை வீரரான பொஸ்னியாவைச் சேர்ந்த டமிர் ஸூம்ஹூருக்கெதிராக விளையாடிக் கொண்டிருந்தார்.

இப்போட்டியில் 6-2 என்ற கணக்கில் முதலாவது செட்டைக் கைப்பற்றிய ரபேல் நடால், அடுத்த செட்டை 4-6 என்ற புள்ளிகள் கணக்கில் இழந்ததோடு, 0-3 என்ற புள்ளிகள் கணக்கில் அடுத்த செட்டில் பின்தங்கியிருந்த போது, போட்டியிலிருந்து விலகினார்.

'முதலாவது செட்டின் இறுதிவரை, அனைத்துமே சரியாக இருந்தன. அதன் பின்னர், மயக்கம்வருவது போன்று உணர்ந்தேன். அது தொடர்ந்தும் மோசமடைந்தது. போட்டியை முடிக்க விரும்பினேன், ஆனால் என்னால் முடிந்திருக்கவில்லை. எனது உடலாரோக்கியம் தொடர்பாகக் கவனஞ்செலுத்தியமையால், விளையாடுவதை நான் நிறுத்தினேன்" என்றார்.

அமெரிக்காவின் புளோரிடாவில் இடம்பெற்றுவரும் இப்போட்டிகள், அதிக வெப்பத்துக்கும் கடுமையான ஈரப்பதனுக்கும் மத்தியில் இடம்பெறுவதால், வீரர்கள் தடுமாறுவதாக அறிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இடம்பெற்ற ஏனைய போட்டிகளில், உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த டெனிஸ் இஸ்டோமினை எதிர்கொண்ட 2ஆம் நிலை வீரரான பிரித்தானியாவின் அன்டி மரே, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றிகொண்டார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .