2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

யுனைட்டட்டை வென்றது ஆர்சனல்

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 05 , மு.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளில், மன்செஸ்டர் யுனைட்டட் அணிக்கும் ஆர்சனல் அணிக்குமிடையிலான போட்டியில் ஆர்சனல் அணி மிகச்சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது. தவிர, ஸ்வான்சீ சிற்றி - டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸ், எவேர்ட்டன் - லிவர்பூல் அணிகளுக்கிடையிலான போட்டிகள் சமநிலையில் முடிவடைந்தன.

மன்செஸ்டர் யுனைட்டட் - ஆர்சனல் அணிகளுக்கிடையிலான போட்டியின் முதல் 20 நிமிடங்களில் ஆர்சனலின் ஆதிக்கத்தின் காரணமாக, மன்செஸ்டர் யுனைட்டட் அணி தடுமாறியது. போட்டியின் 6ஆவது நிமிடத்தில், அலெக்ஸிஸ் சன்செஸ் பெற்றுக் கொண்ட கோலில் ஆர்சனல் முன்னிலை பெற, அடுத்த நிமிடத்தில் மசூட் ஓஸில், மற்றொரு கோலைப் பெற்று, 2-0 என்ற முன்னிலையை வழங்கினார்.

தொடர்ந்தும் அதிரடியாக விளையாடிய ஆர்சனல், 19ஆவது நிமிடத்தில் அலெக்ஸிஸ் சன்செஸ் பெற்றுக் கொடுத்த கோலின் காரணமாக, முதல் 20 நிமிடங்களுக்குள்ளேயே 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. முதலாவது பாதியில் மேலதிகக் கோல்கள் பெறப்பட்டிருக்காத நிலையில், இரண்டாவது பாதியில், முதற்பாதியில் காட்டியளவு தாக்குதலாட்டத்தை வெளிப்படுத்த, ஆர்சனல் தவறியிருந்தது. இறுதியில், 3-0 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் அணி வெற்றிபெற்றது.

எவேர்ட்டன் அணிக்கும் லிவர்பூல் அணிக்குமிடையிலான போட்டி, 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
42ஆவது நிமிடத்தில் டானி இங்ஸ் பெற்ற கோலினால் லிவர்பூல் முன்னிலை பெற்ற போதிலும், 45ஆவது நிமிடத்தில் றொமேலு லூகாகு பெற்ற கோலினால், கோல் எண்ணிக்கை சமப்பட்டது. இரண்டாவது பாதியில் கோலெவையும் பெறப்படாது போக, போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

ஸ்வான்சீ சிற்றி அணிக்கும் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸ் அணிக்குமிடையிலான போட்டி, 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. ஸ்வான்சீ சிற்றி அணி சார்பாக அன்ட்ரே அயேவ் (16ஆவது நிமிடம்), ஹரி கேன் (ஒவ்ண் கோல் - 31ஆவது நிமிடம்) ஆகியோர் கோல் பெற, 27ஆவது நிமிடத்திலும் 65ஆவது நிமிடத்திலும் கிறிஸ்டியன் எரிக்சென், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸ் சார்பாகக் கோல்களைப் பெற்றார்.

இப்போட்டி முடிவையடுத்து, மன்செஸ்டர் சிற்றி அணி முதலிடத்திலும் ஆர்சனல் இரண்டாமிடத்திலும் மன்செஸ்டர் யுனைட்டட் அணி மூன்றாமிடத்திலும் கிறிஸ்டர் பலஸ் அணி நான்காமிடத்திலும் காணப்படுகின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X