2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

வார்டி ஹட்-ரிக்: சிற்றியைத் தோற்கடித்தது லெய்செஸ்டர்

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 11 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் பிறீமியர் லீக் தொடரில், நேற்று (10) இடம்பெற்ற போட்டியொன்றில், தற்போதைய பிறீமியர் லீக் சம்பியன்களான லெய்செஸ்டர் சிற்றி, மன்செஸ்டர் சிற்றியைத் தோற்கடித்துள்ளது. இது தவிர, ஸ்டோக் சிற்றியைத் தோற்கடித்த ஆர்சனல், பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் முதலிடத்துக்குச் சென்றது.

லெய்செஸ்டர் சிற்றி, 4-2 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் சிற்றியைத் தோற்கடித்தது. கடந்த 10 பிறீமியர் லீக் போட்டிகளில், கோலெதனையும் பெற்றிருக்காத ஜேமி வார்டி போட்டியின் மூன்றாவது நிமிடத்தில் பெற்ற கோலின் மூலம் லெய்செஸ்டர் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதனைத் தொடந்த சில கணங்களில், அன்டி கிங் ஒரு கோலினைப் பெற, 2-0 என்ற கோல் கணக்கில் உறுதியான முன்னிலையை, லெய்செஸ்டர் பெற்றது.

பின்னர், போட்டியின் 20ஆவது நிமிடத்தில், சிற்றியின் கோல் காப்பாளர் கிளாடியோ பிராவோவைத் தாண்டிச் சென்ற வார்டி, தனது இரண்டாவது கோலைப் பெற, 3-0 என்ற அசைக்க முடியாத முன்னிலையை லெய்செஸ்டர் பெற்றது. அதன்பின்னர், சிற்றியின் ஜோன் ஸ்டோன்ஸின் பந்துப் பரிமாற்றமொன்றை இடைமறித்த வார்டி, போட்டியின் 78ஆவது நிமிடத்தில் தனது ஹட்-ட்ரிக்கை பூர்த்தி செய்ய 4-0 என்ற கோல் கணக்கில் லெய்செஸ்டர் முன்னிலை பெற்றது.

இதன் பின்னர், அலெக்ஸான்டர் கொலரோவ்வின் “பிறீ கிக்” மூலமாக போட்டியின் 82ஆவது நிமிடத்தில் கோலொன்றைப் பெற்றதுடன், போட்டியின் இறுதி நிமிடத்தில் நொலிட்டோ பெற்ற கோலாலும், ஆறுதல் கோல்களைப் பெற்ற சிற்றி, 2-4 என்ற கோல் கணக்கில் இறுதியில் தோல்வியடைந்தது.

ஐந்து போட்டிகளில், தொடர்ச்சியாக வெற்றியின்றிக் காணப்பட்ட லெய்செஸ்டர் சிற்றி, இப்போட்டியில் பெற்ற வெற்றியுடன், பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் 14ஆவது இடத்துக்குச் சென்றது. மன்செஸ்டர் சிற்றி, நான்காவது இடத்தில் காணப்படுகிறது.

ஸ்டோக் சிற்றியை, 3-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்த ஆர்சனல், பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் முதலிடத்துக்குச் சென்றது. ஆர்சனல் சார்பாக, தியோ வொல்கொட், மெசூட் ஏஸில், அலெக்ஸ் இவோபி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .