2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

இந்திய - இங்கிலாந்து போட்டி சமநிலையில் முடிவு

Super User   / 2011 பெப்ரவரி 27 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற  இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் இரு அணிகளுமே 338 ஓட்டங்களைப் பெற்றதால் இப்போட்டி சமநிலையில் முடிவுற்றது.

பெங்களுர் சின்னச்சாமி அரங்கில் பகல் - இரவு ஆட்டமமாக நடைபெற்ற குழு பி அணிகளுக்கிடையிலான இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 49.5 ஓவர்களில் 338 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

சச்சின் டெண்டுல்கர் 115 பந்துவீச்சுகளில் 120 ஓட்டங்களைப் பெற்றார். யுவராஜ் சிங் 50 பந்துகளில் 58 ஓட்டங்களைப் பெற்றார். கௌதம் காம்பீர்  50 ஓட்டங்களைப் பெற்றார்.

இங்கிலாந்து பந்துவீச்சாளர்களில் டிம் பிராஸ்னன் சிறப்பாக பந்துவீசி 48 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சார்பில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான அணித்தலைவர் அன்ட்ரூ ஸ்ட்ரௌஸ் 145 பந்துவீச்சுகளில் 158 ஓட்டங்களைப் பெற்றார்.

42.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 281 ஓட்டங்களை  இங்கிலாந்து அணி பெற்றிருந்தது. எனினும் சிறப்பாக துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த இயன் பெல்லும் அன்ட்ரூ ஸ்ட்ரௌஸும் ஆட்டமிழந்தபோது இங்கிலாந்து அணி நெருக்கடிக்குள்ளானது.

கடைசி ஓவரில் இங்கிலாந்து அணிக்கு 2 விக்கெட்டுகள் கைவசமிருந்த நிலையில் 14 ஓட்டங்கள் தேவைப்பட்டன.

அதன்பின் மைக்கல் யார்டி ரிம். பிராஸ்னன் ஆகியோர் இங்கிலாந்து அணியை மீள தூக்கி நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். யார்டி 10 பந்துகளில் 13 ஓட்டங்களைக்குவித்து ஆட்டமிழந்தார்.

கடைசி இரு ஓவர்களில் இங்கிலாந்து அணிக்கு 29 ஓட்டங்கள் தேவைப்பட்டன.

பியூஷ் சாவ்லா வீசிய 49 ஆவது ஓவரின் 5 ஆவது பந்தில் பிராஸ்னன் சிக்ஸர் ஒன்றை அடித்து பரபரப்பை அதிகரிக்கச் செய்தார். அப்போது இங்கிலாந்து அணியின் ஓட்ட எண்ணிக்கை 325 ஆக அதிகரித்தது. ஆனால் அடுத்த பந்திலேயே அவர் ஆட்டமிழந்தார்.

கடைசி ஓவரில் இங்கிலாந்து அணிக்கு 14 ஓட்டங்கள் தேவைப்பட்டன. முழு அரங்கமும் மெனளத்தில் உறைந்துகிடக்க  முனாவ் பட்டேல் பந்துவீச வந்தார்.

அந்த ஓவரின் முதல் பந்தில் 2 ஓட்டங்களைப் பெற்ற கிறேம் ஸ்வான் அடுத்த பந்தில் ஒரு ஓட்டத்தைப் பெற்றார்.

3 ஆவது பந்தில்  அஹ்மட் சஹ்ஸாட் சிக்ஸர் அடித்தார். இங்கிலாந்து அணியின் ஓட்ட எண்ணிக்கை 336 ஆக உயர்ந்தது.

4 ஆவது பந்தில் பை ரன்னாக ஒரு ஓட்டத்தை இங்கிலாந்து பெற்றது.

5 ஆவது பந்தில் கிறேம் ஸ்வான் இரு ஓட்டங்களைப் பெற்றார்.

இந்நிலையில், கடைசி பந்துவீச்சில் 2 ஓட்டங்கள் தேவைப்பட்டன. முனாவ் பட்டேல் வீசிய அப்பந்தை கிறேம் ஸ்வான் எதிர்கொண்டார்.

மிட்ஓவ் திசையில் அடித்த பந்தில் ஒரு ஓட்டத்தை மாத்திரமே ஸ்வான் பெற்றார். இதனால் இப்போட்டி சமநிலையில் முடிவுற்றது.

இதனால் இரு அணிகளும் தலா ஒரு புள்ளியை பெற்றுக்கொண்டன. உலக கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் சமநிலையில் முடிந்த 4 ஆவது போட்டி இதுவாகும்.

இப்போட்டியின் சிறப்பாட்டக்  காரராக இங்கிலாந்து அணித்தலைவர் அன்ட்ரூ ஸ்ட்ரௌஸ் தெரிவானார்.
 


  Comments - 0

 • Ramesh Monday, 28 February 2011 05:14 AM

  சூப்பர், சூப்பர்

  Reply : 0       0

  Niththi Monday, 28 February 2011 05:16 AM

  இந்திய அணியின் பிரமாண்ட ஓட்டக் குவிப்பை கண்டு மலைத்து நின்றுவிடாமல் நம்பிக்கையுடன் போராடிய இங்கிலாந்து அணிக்கு பாராட்டுகள்

  Reply : 0       0

  unmai Monday, 28 February 2011 12:24 PM

  திறமையான ஆட்டம்

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--