Super User / 2011 மார்ச் 24 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது காலிறுதிப் போட்டியில் இந்திய அணி அவுஸ்திரேலியாவை 5 விக்கெட்டுகளால் தோற்கடித்தது.
அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அஹமதாபாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 260 ஓட்டங்களைப் பெற்றது. அணித்தலைவர் ரிக்கி பொன்டிங் 104 ஓட்டங்களைப் பெற்றார். ஒருநாள் சர்வதேச போட்டிகளில் பொன்டிங் பெற்ற 30ஆவது சதம் இதுவாகும். பிரட் ஹடின் 53 ஓட்டங்களைப் பெற்றார்.
இந்திய பந்துவீச்சாளர்களில் அஸ்வின், ஸஹீர்கான், யுவராஜ் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் வீரேந்தர் ஷேவாக் 15 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் சச்சின் டெண்டுல்கர் 53 ஓட்டங்களையும் கௌதம் காம்பீர் 50 ஓட்டங்களையும் பெற்றனர். வீரட் கோலி 24 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
அணித்தலைவராக தனது 100 ஆவது போட்டியில் விளையாடிய மஹேந்திர சிங் டோனி 7 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தபோது இந்திய அணி 38 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது.
எனினும் யுவராஜ் சிங்கும் சுரேஷ் ரெய்னாவும் இந்திய அணியின் ஓட்ட வேகத்தை அதிகரிக்கத் தொடங்கினர்.
இவ்விருவரின் சிறப்பான துடுப்பாட்டத்தின் உதவியுடன் இந்திய அணி 47.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
யுவராஜ் சிங் ஆட்டமிழக்காமல் 57 ஓட்டங்களைப் பெற்றார். சுரேஷ் ரெய்னா 28 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 34 ஓட்டங்களைப் பெற்றார். யுவராஜ் சிங் இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார்.
1987ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்தை முதல் தடவையாக வென்ற அவுஸ்திரேலியஅணி அதன்பின் 1999, 2003, 2007 ஆம் ஆண்டுகளிலும் சம்பியனாகியிருந்தது. இம்முறை அவ்வணி காலிறுதிப் போட்டியுடன் வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்திய- பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான அரையிறுதிப்போட்டி மார்ச் 30 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

18 minute ago
24 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
24 minute ago
32 minute ago