2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

இலங்கை, நியூசிலாந்து நான்காவது போட்டி இன்று

A.P.Mathan   / 2012 நவம்பர் 10 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணிக்கும், இலங்கை அணிக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் நான்காவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்‌ஷ சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ள இப்போட்டி இன்று 2.30 இற்கு ஆரம்பிக்கவுள்ளது.

ஏற்கனவே 3 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் 2 போட்டிகள் மாத்திரம் முடிவைத் தந்த போட்டிகளாக அமைந்துள்ளன. அவ்விரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. எனவே இத்தொடரின் அடுத்த 2 போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வியுற்றாலும் கூட இத்தொடரை இழக்க முடியாது என்ற நிலை காணப்படுகிறது.

2ஆவது, 3ஆவது போட்டிகளில் நியூசிலாந்து அணி ஓரளவு போட்டித்தன்மையான ஓட்ட எண்ணிக்கையொன்றைப் பெற்றுக் கொண்ட போதிலும் இலங்கை அணியின் துடுப்பாட்டம் சிறப்பானதாக அமைந்ததால் இலங்கை அணி வெற்றியைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பாக அவ்வணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் திலகரட்ண டில்ஷான் உபாதையடைந்துள்ளதன் காரணமாக 4ஆவது, 5ஆவது ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பங்குபெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக மஹேல ஜெயவர்தன ஆரம்பத்துடுப்பாட்ட வீரராகக் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுவதோடு, மஹேலவின் இடத்திற்கு டினேஷ் சந்திமால் களமிறக்கப்படுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

நியூசிலாந்து அணி சார்பாக அன்ட்ரூ எலிஸ் தனக்கு ஏற்பட்ட வயிற்று உபாதையிலிருந்து குணமடைந்தால் அவர் இன்றைய போட்டியில் பங்குபற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜேக்கப் ஓரமிற்குப் பதிலாக அவர் இன்றைய போட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் அணிகள்:

இலங்கை: உபுல் தரங்க, மஹேல ஜெயவர்தன, குமார் சங்கக்கார, டினேஷ் சந்திமால், அன்ஜலோ மத்தியூஸ், லஹிரு திரிமன்ன, ஜீவன் மென்டிஸ், திஸர பெரேரா, நுவான் குலசேகர, ரங்கன ஹேரத், லசித் மலிங்க.

நியூசிலாந்து: பி.ஜே.வற்லிங், ரொப் நிக்கல், பிரென்டன் மக்கலம், ரொஸ் ரெய்லர், கேன் வில்லியம்ஸன், ஜேம்ஸ் ஃபிராங்ளின், அன்ட்ரூ எலிஸ், நேதன் மக்கலம், கைல் மில்ஸ், ரிம் சௌதி, ட்ரென்ட் போல்ட்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .