2021 ஜனவரி 23, சனிக்கிழமை

இந்திய - பாகிஸ்தான் உலகக்கிண்ண அரையிறுதி நிர்ணயிக்கப்பட்டது?

A.P.Mathan   / 2012 நவம்பர் 10 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

2011ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக்கிண்ணப் போட்டிகளில் இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான அரையிறுதிப் போட்டி ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டபடி இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஒருவரை இந்தச் சந்தேகங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

எட் ஹவ்கின்ஸ் என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஒருவர் வெளியிடவுள்ள புத்தகமொன்றின் வெளியாகியுள்ள தகவல்களே இந்தச் சந்தேகங்களை எழுப்பியுள்ளன.

அவர் வெளிப்படுத்தியுள்ள தகவல்களின் அடிப்படையில் அந்த அரையிறுதிப் போட்டியில் இடம்பெறவுள்ள விடயங்கள் ஏற்கனவே தனக்குத் தெரிந்த இந்தியாவைச் சேர்ந்த சூதாட்டக்காரரான பார்த்திவ் என்பவரால் தெரிவிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

விளையாட்டில் பந்தயம் வைத்தல் தொடர்பான ஊடகவியலாளரான எட் ஹவ்கின்ஸ், நீண்ட காலங்களாக கிரிக்கெட்டில் சூதாட்டம், முறைகேடுகள் தொடர்பான ஆராய்வுகளை மேற்கொண்டு வந்திருந்தார்.

இந்நிலையிலேயே அவர் வெளியிடவுள்ள புதிய புத்தகத்தில் உள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துவனாக உள்ளன.

அவரது கருத்தின்படி முதல் 15 ஓவர்களுக்குள் இந்திய அணியின் 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தப்படும் எனவும், இந்திய அணி 260 ஓட்டங்களைப் பெற்றுக் கொள்ளும் எனவும், பாகிஸ்தான் அணி முதல் 100 ஓட்டங்களை இலகுவாகப் பெற்றுக் கொண்ட பின்னர் 2 விக்கெட்டுக்களைத் தொடர்ச்சியாக இழக்கும் எனவும், அதன் பின்னர் 150 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து கொள்ளும் எனவும், இறுதியில் 20இற்கு அண்மையான ஓட்டங்களால் பாகிஸ்தான் அணி தோல்வியடையும் எனவும் தெரிவித்ததாகத் தெரிவித்துள்ளார்.

அப்போட்டியில் இந்திய அணி 260 ஓட்டங்களைப் பெற்றதோடு, முதல் 15 ஓவர்களுக்குள் 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தப்படாததால் இந்திய அணி தவறெதனையும் செய்திருக்கவில்லை என எட் ஹவ்கின்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆனால் பாகிஸ்தான் அணி 22.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 100 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. 100 ஓட்டங்களை அடைந்த அடுத்த ஓவரில் அசத் சபீக்கும், அதற்கடுத்த ஓவருக்கு அடுத்த ஓவரில் யுனிஸ் கானும் ஆட்டமிழந்திருந்தனர்.

உமர் அக்மல் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த போதிலும், அணி 142 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது மோசமான துடுப்பாட்டப் பிரயோகமொன்றை மேற்கொண்டு அவர் ஆட்டமிழந்தார். இறுதியில் மிஸ்பா உல் ஹக் அடித்தாடியிருந்த போதிலும் பாகிஸ்தான் அணி 29 ஓட்டங்களால் தோல்வியடைந்திருந்தது.

இப்போட்டியில் இந்திய அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் அதிகபட்சமாக 85 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டதும், அவரது 4 பிடிகள் பாகிஸ்தான் வீரர்களால் தவறவிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .