2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

நான்காம் நாள் முடிவில் பங்களாதேஷ், மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் போராட்டம்

A.P.Mathan   / 2012 நவம்பர் 16 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும், பங்களாதேஷ் அணிக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் முடிவில் இரு அணிகளும் சமபலத்துடன் போராடி வருகின்றன.

மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் இனிங்ஸில் 4 விக்கெட்டுக்களை இழந்து 527 ஓட்டங்களைப் பெற்று தனது இனிங்ஸை இடைநிறுத்திய பின்பு தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி மூன்றாம் நாள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 455 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இந்நிலையில் இன்று தொடர்ந்தும் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 556 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இதன்படி அவ்வணி மேற்கிந்தியத் தீவுகளை விட 29 ஓட்டங்களை பங்களாதேஷ் அணி அதிகமாகப் பெற்றிருந்தது.

துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணி சார்பாக நயீம் இஸ்லாம் 108 ஓட்டங்களையும், நசீர் ஹொசைன் 96 ஓட்டங்களையும், ஷகிப் அல் ஹசன் 89 ஓட்டங்களையும், தமிம் இக்பால் 72 ஓட்டங்களையும், மஹமதுல்லா 62 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக ரவி ராம்போல், சுனில் நரைன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், டெரன் சமி 2 விக்கெட்டுக்களையும், ரீனோ பெஸ்ட், வீரசம்மி பேர்மாள் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

29 ஓட்டங்கள் பின்னிலையில் காணப்பட்ட நிலையில் தொடர்ந்து ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி இன்றைய நாள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 244 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதன்படி அவ்வணி 215 ஓட்டங்களால் முன்னிலை வகிக்கிறது.

துடுப்பாட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக கெரன் பவல் 110 ஓட்டங்களையும், டெரன் பிராவோ 76 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் பங்களாதேஷ் அணி சார்பாக சொஹக் கஷி, ரூபெல் ஹொசைன், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

போட்டியின் இறுதி நாள் நாளையாகும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .