2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

போட்டி நிர்ணயக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணை வேண்டும்: அமைச்சர்

A.P.Mathan   / 2012 நவம்பர் 17 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக் கிரிக்கெட் அணி மீது சுமத்தப்பட்டுள்ள போட்டி நிர்ணயக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை நடாத்தப்பட வேண்டும் என இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இலங்கைக் கிரிக்கெட் சபையிடமே இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த ஊடகவியலாளரான எட் ஹவ்கின்ஸ் என்பவர் இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2011ஆம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டிகளின் அரையிறுதிப் போட்டி தொடர்பான கேள்விகளை எழுப்பியிருந்தார். அதன் பின்னர் அவர் இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் 2011ஆம் ஆண்டு இடம்பெற்ற டெஸ்ட் போட்டியொன்றைப் பற்றிய சந்தேகங்களை எழுப்பியிருந்தார்.

இங்கிலாந்தின் கார்டிவ்வில் இடம்பெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 400 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. பதிலளித்தாடிய இங்கிலாந்து அணி 496 ஓட்டங்களைப் பெற, இலங்கை அணி மூன்றாவது இனிங்ஸில் 82 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களை இழந்திருந்தது.

நீண்ட காலமாக இலங்கை வீரர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டிருக்காத நிலையில் அப்போட்டியை இலங்கை வீரர்கள் வேண்டுமென்றே விட்டுக் கொடுத்திருக்கலாம் எனவும், சில வேளைகளில் பணத்தைப் பெற்றுக் கொண்டிருக்கலாம் எனவும் அவர் சந்தேகத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என மஹிந்தானந்த அளுத்கமகே கோரிக்கை விடுத்துள்ள போதிலும், இவ்விடயம் தொடர்பாக சர்வதேசக் கிரிக்கெட் சபை தங்களுக்கு அறிக்கை வழங்கினாலொழிய தங்களால் இவ்விடயம் தொடர்பாகக் கருத்துக்களை வெளிப்படுத்த முடியாது என இலங்கைக் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இதேவேளை குறித்த குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள இலங்கை அணியின் தற்போதைய தலைவர் மஹேல ஜெயவர்தன, புத்தகத்தை விற்பனை செய்வதற்காக அந்த ஊடகவியலாளரின் இழிவான நடவடிக்கையே இது என அவர் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .