2020 நவம்பர் 01, ஞாயிற்றுக்கிழமை

அஜ்மலின் பந்துவீச்சில் தடுமாறுகிறது தென்னாபிரிக்கா

A.P.Mathan   / 2013 பெப்ரவரி 16 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கும், தென்னாபிரிக்க அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி சயீட் அஜ்மலின் சிறப்பான பந்துவீச்சால் தடுமாறி வருகிறது.

இரண்டாம் நாள் முடிவில் தென்னாபிரிக்க அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 139 ஓட்டங்களைப் பெற்றுத் தடுமாறி வருகிறது.

தனது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் தென்னாபிரிக்க அணி முதலாவது விக்கெட்டுக்காக 36 ஓட்டங்களைப் பகிர்ந்த போதிலும், அதன் பின்னர் சயீட் அஜ்மலின் பந்துவீச்சுக்கு விக்கெட்டுக்களை இழந்தது. ஒரு கட்டத்தில் அவ்வணி 5 விக்கெட்டுக்களை இழந்து 109 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. 6ஆவது விக்கெட்டுக்காகப் பிரிக்கப்படாத 30 ஓட்டங்கள் இதுவரை பகிரப்பட்டுள்ளன.

துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்க அணி சார்பாக பஃப் டு பிளெஸிஸ் 28 ஓட்டங்களையும், ஹசிம் அம்லா 25 ஓட்டங்களையும், ஏபி.டி.வில்லியர்ஸ் ஆட்டமிழக்காமல் 24 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக வீழ்த்தப்பட்ட அத்தனை விக்கெட்டுக்களையும் சயீட் அஜ்மல் வீழ்த்தியிருந்தார். அவர் 25 ஓவர்கள் பந்துவீசி, 8 ஓட்டமற்ற ஓவர்கள் அடங்கலாக 41 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்.

முன்னதாக, 5 விக்கெட்டுக்களை இழந்து 253 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த பாகிஸ்தான் அணி, சகல விக்கெட்டுக்களையும் இழந்து 338 ஓட்டங்களைப் பெற்றது.

அவ்வணியின் விக்கெட்டுக்கள் நேற்று விரைவாக இழக்கப்பட்டு 8 விக்கெட்டுக்களை இழந்து 268 ஓட்டங்களைப் பெற்றிருந்த போதிலும், 9ஆவது விக்கெட்டுக்காக தன்வீர் அஹமட், சயீட் அஜ்மல் இருவரும் 64 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தனர்.

துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பாக அசத் சபீக், யுனிஸ் கான் இருவரும் தலா 111 ஓட்டங்களையும், தன்வீர் அஹமட் 44 ஓட்டங்களையும், சயீட் அஜ்மல் ஆட்டமிழக்காமல் 21 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பாக வேர்ணன் பிலாந்தர் 5 விக்கெட்டுக்களையும், மோர்னி மோர்க்கல், ரொபின் பீற்றர்சன் இருவரும் தலா 2 விக்கெட்டுக்களையும், டேல் ஸ்ரெய்ன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--