2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

ஜப்பானுக்கெதிராக இலங்கை மகளிர் அணி அதிரடி

Kogilavani   / 2013 ஜூலை 26 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்றுவரும் மகளிருக்கான உலக டுவென்டி டுவென்டி தொடருக்கான தகுதிகாண் போட்டிகளில் இலங்கை மகளிர் அணி சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது.

ஜப்பான் மகளிர் அணிக்கெதிராக இலங்கை மகளிர் அணி 10 விக்கெட் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

டப்ளினில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்பான் மகளிர் அணி 18.1 ஓவர்களில் 21 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

முதலாவது பந்திலேயே தனது முதலாவது விக்கெட்டை இழந்த ஜப்பான் மகளிர் அணி, 7 விக்கெட்டுக்களை இழந்து 11 ஓட்டங்களுடன் காணப்பட்டது. 8ஆவது விக்கெட்டுக்காக 8 ஓட்டங்கள் பகிரப்பட்டிருந்தன.

துடுப்பாட்டத்தில் ஜப்பான் மகளிர் அணி சார்பாக அயாகோ நாகாயமா 37 பந்துகளில் 12 ஓட்டங்களைப் பெற்றார்.
வேறு எந்த வீராங்கனையும் 2 ஓட்டங்களுக்கு அதிகமாகப் பெற்றிருக்கவில்லை.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக சண்டிமா குணரத்ன 4 ஓவர்களில் 2 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், ஸ்ரீபாலி வீரக்கொடி 3 ஓவர்களில் 2 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், இஷானி கௌஷல்யா 4 ஓவர்களில் 5 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், ஷஷிகலா சிரிவர்தன, சாமனி செனவிரத்ன இருவரும் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
வழங்கப்பட்ட வெற்றி இலக்கை இலங்கை மகளிர் அணி 1.4 ஓவர்களில் இலகுவாக அடைந்தது.

இலங்கை சார்பாக யசோதா மென்டிஸ் 7 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 18 ஓட்டங்களையும், சாமரி அத்தப்பத்து 3 பந்துகளில் 4 ஓட்டங்களையும் பெற்றனர்.

இப்போட்டியின் நாயகியாக இலங்கை சார்பாக 2 விக்கெட்டுக்களையும், 2 ரண் அவுட் வாய்ப்புக்களையும் ஏற்படுத்திய இஷானி கௌஷல்யா தெரிவானார்.

இப்போட்டியின் முடிவையடுத்து இலங்கை அணி அரையிறுதிக்குத் தகுதிபெற்றுள்ளது.

இத்தொடரில் முதல் 3 இடங்களைப் பெறும் அணிகள் உலக டுவென்டி டுவென்டி தொடருக்குத் தகுதிபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .