2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான் தொடரில் போட்டி நிர்ணயமா?

A.P.Mathan   / 2013 ஜூலை 29 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கும், மேற்கிந்தியத் தீவுகளுக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் போட்டிகளில் முறைகேடுகள் இடம்பெற்றிருக்கலாம் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன. 3ஆவது, 5ஆவது போட்டிகள் அதிகமான கவனத்தை ஈர்த்துள்ளன.
 
3ஆவது போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடிப் பெற்ற 229 ஒட்டங்களுக்குப் பதிலளித்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்களில் 229 ஓட்டங்களைப் பெற்றதால் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
 
இப்போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி முடிந்த பின்னர் இப்போட்டி சமநிலையில் முடிவடையும் என அதிகளவிலான பந்தயங்கள் முன்வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
இறுதி ஓவரில் 15 ஓட்டங்கள் தேவைப்பட்டபோது வகாப் றியாஸ் வீசிய ஓவரில் களத்தடுப்பு வியூகங்கள் அதிக சந்தேகங்களை எழுப்பியதோடு, இறுதிப் பந்தில் 3 ஓட்டங்கள் தேவைப்பட்டிருக்க, மேற்கிந்தியத் தீவுகள் அணி 2 ஓட்டங்களைப் பெற்றபோது காணப்பட்ட ரண் அவுட் வாய்ப்பொன்றை விக்கெட் காப்பாளரான உமர் அக்மல் தவறவிட்டிருந்தார். இதன் மூலம் சமநிலை முடிவு ஏற்பட்டது.
 
இதேவேளை, மேற்கிந்தியத் தீவுகள் அணி தோல்வியடைந்த போட்டியான 5ஆவது போட்டி குறித்தும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
 
அப்போட்டியின் 30ஆவது முதல் 34ஆவது வரையிலான 5 ஓவர்களில் வெறுமனே 2 ஓட்டங்கள் மாத்திரமே மொத்தமாகப் பெறப்பட்டிருந்தன. அதிரடி வீரர்களான கிறிஸ் கெயில், மார்லன் சாமுவேல்ஸ் இருவரும் அந்த 5 ஓவர்களில் 3 ஓவர்களில் ஓட்டமெதனையும் பெறாததோடு, 2 ஓவர்களுக்கு தலா ஓர் ஓட்டத்தை மாத்திரம் பெற்றுக் கொடுத்திருந்தனர்.
 
இந்த இரு போட்டிகள் உட்பட இத்தொடர் குறித்து சர்வதேசக் கிரிக்கெட் சபை கவனம் செலுத்தியுள்ளதாக இங்கிலாந்தின் டெய்லி மெய்ல் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X