2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

சென்னை சுப்பர் கிங்ஸ் அணி உயர் நீதி மன்றத்தில் மனுத்தாக்கல்

A.P.Mathan   / 2015 ஓகஸ்ட் 21 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டு வருடங்களுக்கு ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ள சென்னை சுப்பர்கிங்ஸ் அணியின் உரிமையாளர்கள் சார்பில் முறையீட்டு மனுவொன்று சென்னை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

நீதியரசர் லோதா தலைமையிலான குழுவினரின் விசாரணைகளின் பின்னரான பரிந்துரைகளையடுத்து ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட சென்னை சுப்பர் கிங்க்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இரண்டு வருடங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. 

ஆயினும், அந்த இரு அணிகளதும் இடங்களுக்கு புதிய வேறு இரு அணிகளைக் கொண்டுவருவதில் காணப்படும் நடைமுறைச் சிக்கல்களைக் கருத்தில்கொண்டு, புதிய நிர்வாகத்தின் கீழாக அந்த இரு அணிகளையுமே அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐ.பி.எல் தொடரில் விளையாட அனுமதிக்கும் முடிவுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை வரவிருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன.
 
இந்த நிலையிலேயே, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர்கள் சார்பில் குறித்த முறையீட்டு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. 
லோதா குழுவின் பரிந்துரைகள் பக்கச் சார்பாக இருந்ததாகக் குறிப்பிட்டே இந்த முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த வழக்கில் டெல்லியைச் சேர்ந்த முக்கிய வழக்கறிஞர் ஒருவர், சென்னை சுப்பர் கிங்ஸ் அணி சார்பில் ஆஜராகவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. 

இந்திய கிரிக்கெட் சபையினால் நியமிக்கப்பட்டுள்ள செயற்பாட்டுக் குழுவின் அறிக்கை இந்த மாத இறுதியில் கையளிக்கப்படவுள்ள நிலையில், அதுவும் தமக்குச் சாதகமாக அமையலாம் என்று சென்னை சுப்பர்கிங்ஸ் அணி நிர்வாகத்தினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .